இயற்கையை நேசி இடர் வருமா யோசி !
இயற்கையோடு இணைந்தும் இசைந்தும் வாழ்ந்து கொண்டிருந்த வயநாட்டு மக்களின் வாழ்க்கை இமைக்கும் நேரத்துக்குள் இல்லாமல் போனது இதயத்தை உறைய வைக்கும் இந்த ஆண்டின் மிகப் பெரிய சோகம்.
300க்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் மண்ணுக்குள் சேறும் சகதியுமாய் புதைந்து கிடந்ததைப் பார்த்த போது .. வீடிழந்து உடமையிழந்து உறவினர்கள் இழந்து வாழ்க்கையைத் தொலைத்து வாட்டத்துடன் நிற்கும் நம் சோதர உறவுகளைப் பார்த்த போது .. தேசம் செயலிழந்து போனது.
இயற்கையை அள்ளித் தந்த முண்டக்கை , குரல் மலை , நூல் மலை போன்ற இடங்கள் மண்ணோடு மண்ணாக நம் கண் முன்னே புதைந்து போனது இயற்கைச் சீற்றத்தின் உச்சம்.
தங்கள் உயிரைத் துச்சமென மதித்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வரும் ஒவ்வொரு மீட்புப்பணி கள வீரர்களையும் கைத் தொழுது வணங்குவோம்.
கேரளா, உத்தரகாண்ட் இமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவதும் உயிர்கள் பலியாவதும் .. மக்கள் வாழ்க்கைப் பாதிக்கப்படுவதும் வழக்கம்தானே என்று காரணங்கள் சொல்லி கடந்து போக முடியவில்லை.
காரணம் அண்மைக்காலங்களில் கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு , இமயமலை அடிவாரங்களில் ஏற்படும் பனிமலை வெடிப்பு , உத்தரகாண்டில் மேகவெடிப்புகளால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு எல்லாம் இயற்கைக்கு மாறான பருவ மாற்றங்களால் ஏற்பட்டு வரும் எதிர்பாராத பெரும் ஆபத்துகளாக உருமாறுகின்றன.
இதை இயற்கைப் பேரிடர்த் துறை பல முறை எச்சரித்தும் சம்மந்தப்பட்ட அரசுகளும் அதிகாரிகளும் கவனத்தில் கொள்ளாததன் விளைவே இத்தகைய விபரீதங்கள் .
ஐ.நா சபையின் பருவநிலை மாற்றம் குறித்த குழு கேரள மாநிலத்தில் பெரும் மழை , நிலச்சரிவு எல்லாம் ஏற்படும் என்று சில ஆண்டுகளாக எச்சரித்தும் கூட கேரள அரசும் , அரசுத் துறையினரும் அலட்சியமாய் இருந்திருப்பதை பலரும் சுட்டிக் காட்டுவது அதிர்ச்சியைத் தருகிறது.வரும் முன் காப்பதுதானே அரசின் தலையாயக் கடமை? வருமானம் ஈட்டும் பேராசையில் மலைச்சரிவு பிரதேசங்களை சுற்றுலாத் தலங்களாகவும் குடியிருப்புப் பகுதிகளாகவும் மாற்றி மேலும் மேலும் கட்டிடங்கள் கட்டியதும் கூட நிலச்சரிவுக்கு காரணமாயிருக்கிறது.
இனியாவது
மலைப்பாங்கான பகுதிகளில் வீடுகள் கட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். அதை மீறுவோர் கண்டிப்புடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இயற்கையை ரசிக்கத்தான் இறைவன் தந்திருக்கிறான். அதைச் சின்னாபின்னமாக்கி தங்கள் வசதிக்கேற்றபடி செயற்கையாக மாற்றினால் .. அதற்கானத் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்கின்ற விழிப்புணர்வை வயநாடு வலியுடன் வலியுறுத்தியிருக்கிறது.
நீர் வழிப் பாதை ,மலைப்பாங்கான இடங்கள் , வன விலங்குகள் வசிக்கும் பகுதிகள் இவற்றை நாம் வாழவைத்தால் தான் இயற்கை நம்மை வாழ வைக்கும் என்கிற உண்மையை இனியாவது மனிதன் உணர்ந்து வாழ வேண்டும்.
இயற்கையை இறைவழிபாடு செய்து இன்பமாய் வாழ்ந்த இந்தியர்கள், இயற்கையை எதிர்த்து வாழத் துணிந்தது காலம் செய்த அலங்கோலமல்ல .. மனிதர்களின் பிழைப்புப் பிழை .
இயற்கையை நேசி
இன்னல் வருமா யோசி ! என்கிற உரத்த சிந்தனையை இனியேனும் இந்தியத் தேசமெங்கும் கொண்டு சேர்க்க வேண்டும். இது இறைவனின் கட்டளையல்ல .. இயற்கையின் எச்சரிக்கை .
- உதயம் ராம்
கருத்துகள் இல்லை