ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி வலியுறுத்தல்
புத்தாண்டில் நாம் அனைவரும் நீர்நிலைகளையும், சூழலியலையும் காக்க வேண்டும் என ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி வலியுறுத்திப் பேசினார்.
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், புத்தாண்டில் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டிய சமூகப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்றது. தொழிலதிபர் மகேந்திரன், ஆதவன் வரவேற்றனர். சங்கர் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ எஸ். எஸ்.சரவணன் முன்னிலை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு பேராசிரியர். ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 'பூக்கட்டும் புதுயுகம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது; "இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்த நாம், அதில் இருந்து விலகிப் போய்க்கொண்டே இருக்கிறோம். அதன் காரணமாக பல அழிவுகளைச் சந்திக்கிறோம். பிறந்துள்ள இந்த புத்தாண்டை நீர்நிலைகள் சுத்தத்திற்கான ஆண்டாக முக்கியத்துவம் தந்து செயல்பட வேண்டும்.
ஏற்கனவே, இயற்கை, பசுமை, காடு மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகளை ரோட்டரி சங்கங்கள் செய்து வருகின்றன. இது, பெரும் இயக்கமாக மாற வேண்டும். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காலம் காலமாக மாசுபட்டு வந்த பவானி, நொய்யல் ஆறுகளை சுத்தப்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது. அதுபோல, வைகை நதியையும், அது பாயும் இடங்கள், கிளை ஆறுகளையும் சுத்தப்படுத்த வேண்டும். அதிலும் முக்கியமாக நதியை அசுத்தம் செய்யக் கூடாது. எல்லோருக்கும் அந்த சமூகப் பொறுப்பு உண்டு. கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாக, ஆறுகளை பாழ்படுத்துவது, நம் எதிர்கால சமூகத்திற்கு செய்யும் பெரும் கேடு.
பல தன்னார்வலர்கள் நதிகளை சுத்தம் செய்யும் பணிகளை செய்து வந்தாலும், அது போதாது. அவர்களோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுத்து, கூட்டாக செயல்பட வேண்டும். இப்போதைய இசட் தலைமுறை இளைஞர்கள், எந்த விதமான சமூகப் பணிகளை செய்யவும் தயாராக இருக்கின்றனர். அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் கொடுத்தால், மிக எளிதாக செய்து விடுவர். இதனால், அவர்களுக்கும் சமூக அக்கறையும், மன பக்குவமும் உருவாகும். வாழ்வில் திசை மாறாமல் இருப்பர். ஆக, சமூக மாற்றத்தோடு, இளைஞர் நலனையும் மேம்படுத்தலாம்" என்றார். நிகழ்வில் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க ஆலோசகர் அழகப்பன் ஆடிட்டர் சேது மாதவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை