கோவில்பட்டி அருகே ஊத்துபட்டியில் கொட்டும் மழையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் மான்கள் , காட்டுப்பன்றிகள் தடுக்க தவறிய வனத்துறையை கண்டித்து - கோவில்பட்டி அருகே ஊத்துபட்டியில் கொட்டும் மழையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊத்துபட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்துப்பட்டி, குருமலை, வெங்கடாசலபுரம், கெச்சிலாபுரம், குமராபுரம், கார்த்திகைபட்டி, முடுக்கலாங்குளம் என கோவில்பட்டி வனச்சரக பகுதிகளை ஒட்டி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிர் செய்துள்ள மக்காச்சோளம் உளுந்து உள்ளிட்ட பயிர்களை மான்கள் , காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளால் அதிகம் சேதம் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்
இதனால் மானாவாரி விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் எதிராக தவறான புள்ளி விவர தகவல்களை வழங்கும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2022- 23 ஆம் ஆண்டில் மானாவாரி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் கண்டன முழக்கமிட்டு உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமராஜ், பொன்னுச்சாமி, தாலுகா உதவி செயலாளர் ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை