சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் நெடுஞ்சாலையில், சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.
சிவகாசி - விருதுநகர் சாலையில் ஆணைக்குட்டம் அணைப் பகுதி உள்ளது. அணைக்கு அருகில் காப்புக்காடு உள்ளது. இதில் மான், மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் ஏராளமாக உள்ளன. இன்று, சிவகாசி சாலையில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரி அருகே, 3 வயதுள்ள புள்ளிமான் ஒன்று காட்டுப்பகுதியிலிருந்து வந்து சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று புள்ளிமான் மீது மோதியது. இதில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து திருவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக ஊழியர்கள் விரைந்து வந்து, விபத்தில் உயிரிழந்த புள்ளிமானை மீட்டனர். கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, விபத்தில் இறந்த புள்ளிமானை உடற்கூறாய்வு செய்து, அருகிலிருந்த காட்டுப் பகுதியில் புதைத்தனர். சிவகாசி - விருதுநகர் சாலையில் உள்ள காப்புக்காடு பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசிப்பதால், அந்தப் பகுதியில் செல்லும் வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்லுமாறு வனத்துறையினர் வலியுறுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை