கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் திமுக டாஸ்மாக் பாரில் கொலை வெறி தாக்குதல்
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் திமுக டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது.டாஸ்மாக் பாரில் மது அருந்திய கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் - காவல்துறையினரை அரிவாள் காட்டி மிரட்டி தப்பியோடிய கும்பல் - அதிர்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் - பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் பாண்டவர்மங்கலம் அருகே செயல்பட்டு வரும் திமுக டாஸ்மாக் பாரில் வெள்ளிக்கிழமை இரவு பாண்டவர்மங்கலத்தினை சேர்ந்த கட்டிட தொழிலாளி சக்திவேல் என்பவர் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவரது அருகே மது அருந்திக்கொண்டு இருந்த 4 பேரில் ஒருவர் திடீரென எழுந்து கையில் வைத்திருந்த மது பாட்டிலை கொண்டு சக்திவேல் தலையில் ஓங்கி அடித்தார். மேலும் மற்ற 3 பேரும் சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, அங்கிருந்த சேரை எடுத்தும் தாக்கினர். அது மட்டுமின்றி தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் மீது தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வந்ததை அறிந்ததும் சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையெடுத்து காயமடைந்த சக்திவேலை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது , சக்திவேல் மீது தாக்குதல் நடத்திய கும்பல் பின்தொடர்ந்தது மட்டுமின்றி அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது போலீசாரையும் மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. சக்திவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்பிரச்சினை குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் பாரில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாண்டவர்மங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனார் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் புகைப்படங்களை சிலர் அவமரியாதை செய்தனர். அந்த பிரச்சினையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சக்திவேல் மற்றும் சிலர் போராட்டத்தினை முன்னெடுத்தனர். அந்த பிரச்சினை காரணமாக சக்திவேல் தாக்கப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னை தாக்க வந்தவர்கள், தன்னை மட்டுமின்றி, ஒரு காவலரையும் வெட்டி முயன்றதாகவும், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமின்றி, தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தாக்குதலுக்கான சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
டாஸ்மாக் பாரில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி கோவில்பட்டி நகரில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை