சிவகாசி ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா நிறைவு... இன்று இரவு தெப்பத்திருவிழா
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த 2 வாரங்களாக கோலாகலமாக நடைபெற்று வந்தது. சிவகாசியின் நான்கு ரதவீதிகளிலும் குடிநீர் இணைப்பு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வந்ததால், பங்குனிப் பொங்கல் தேரோட்ட விழா சற்று சிரமத்துடன் நடந்து முடிந்தது. வழக்கமாக 3 நாட்கள் நடைபெறும் தேரோட்ட விழா இந்த முறை 5 நாட்கள் நடைபெற்றது. ஞாயிறு மாலை ஸ்ரீமாரியம்மன் தேர் நிலைக்கு வந்ததையடுத்து, நேற்று இரவு ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. திருவிழாவின் நிறைவாக ஸ்ரீமாரியம்மன் - ஸ்ரீபத்திரகாளியம்மன் இருவரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் ஊர்வலம் வந்து கடைக்கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனிப் பொங்கல் திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக தெப்பத் திருவிழா இன்று இரவு நடைபெறுகிறது. இன்று இரவு ஸ்ரீமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில், ஸ்ரீமாரியம்மன் எழுந்தருளும் தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை