கோவை மாவட்ட நீதிமன்றம் அருகே ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு மர்மகும்பல் தப்பி ஓட்டம்
கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புற நுழைவா வாயிலில் கோபாலபுரம் பகுதி உள்ளது. இங்கு வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், தனியார் தங்கும் விடுதிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் அலுவலகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் காலை முதல் இரவு வரையில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் இன்று காலையில் 10 மணிக்கு மேல் இரண்டு இளைஞர்களை, 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டியது. அரிவாள், கத்தி, கம்பால் இருவரையும் சரமாரியாக தாக்கியது. ஒருவரை அரிவாளால் வெட்டி, அந்த இடத்திலேயே வெட்டி கொலை செய்தது.
இந்த கொலை சம்பவத்தை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் சத்தமிட்டனர். பயத்தில் அங்கும் இங்கும் ஓடினர். இந்நிலையில் மற்றொரு நபரை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தப்பித்துச் சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரிவாள் வெட்டு காயத்துடன் இருந்த மற்றொரு நபரை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெட்டுப்பட்டு இறந்த நபர் யார்.. அவரோடு வெட்டுப்பட்டு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர், இவர்களை கும்பல் கொலை செய்ய காரணம் என்ன.. என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்றும், காயமடைந்தவர் சிவானந்தாகாலணி சேர்ந்த மனோஜ் என்றும் தெரியவந்துள்ளது. இருவரும் ஒரு வழக்கு விசாரணைக்காக, கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று வந்தபோது, எதிர்கும்பல் கொலை செய்ததுதெரியவந்துள்ளது.
மாவட்ட நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் அருகில், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட நிருபர் : அக்னிபுத்திரன்
கருத்துகள் இல்லை