Header Ads

  • சற்று முன்

    ராஜபாளையம் அருகே சேத்தூரில் மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்


    ராஜபாளையம் அருகே சேத்தூரில் நியாய விலைக் கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மக்கள் எதிர்ப்பை மீறி மற்றொரு பேரூராட்சி சார்பில் கழிவறை கட்டுவதாக கூறி பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியின் 16 வது வார்டில் இது வரை நியாய விலைக் கடை கட்டப்படவில்லை. இப் பகுதியை சேர்ந்த மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் செயல்படும் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.எனவே அந்த வார்டில் உள்ள மலையடிவார புறம்போக்கு நிலத்தில் நியாய விலைக் கடை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் அருகே உள்ள செட்டியார் பட்டி பேரூராட்சி சார்பில் கழிப்பறை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்த மக்கள் அந்த வார்டு கவுன்சிலர் கற்பம் மூலம் எழுத்து பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனை அடுத்து சேத்தூர் பேரூராட்சி செயலர் அந்த இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்த இடத்தில் கட்டட பணிகள் நடந்துள்ளது.

    இது குறித்து இன்று நடந்த பேரூராட்சி கூட்டத்தில் 16 வது வார்டு கவுன்சிலர் கற்பகம், பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் செயல் அலுவலர் வெங்கட கோபுவிடம் கேள்வி எழுப்பினார். அப்போது இவருக்கு ஆதரவாக 7 மற்றும் 8 வது வார்டை சேர்ந்த அதிமுக கவுன்சிலர்களும் பேசினர். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் நடந்தது.கேள்விக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டி கற்பகமும், தங்களை பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்வதாக கூறி இரண்டு அதிமுக கவுன்சிலர்கள் என 3 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர். இதனை அடுத்து 16 வது வார்டு பொது மக்களை திரட்டிய கவுன்சிலர் கற்பகம் பேரூராட்சி நிர்வாகத்தையும், தலைவர் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்தும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது நிர்வாகம் தங்களை அலட்சியப்படுத்துவதாகவும், தங்களது பகுதியில் குறைந்த பட்ச அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் பொது மக்கள் முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச வந்த பேரூராட்சி தலைவரிடம் பொது மக்கள் பேச மறுத்து விட்டனர்.

    தகவல் அறிந்து வந்த துணை வட்டாட்சியர் கோதண்டராமன் பொது மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு, அங்கு நியாய விலைக் கடை மற்றும் அங்கன்வாடி கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

    பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கட்டட பணிகளை தற்காலிகமாக நிறுத்தினர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad