Header Ads

 • சற்று முன்

  "திமுக ஆட்சி என்றாலே ஆவினுக்கு வீழ்ச்சியா..?" -தமிழக அரசுக்கு உதவ தயார், பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு


   தமிழக பால்வளத்துறை பால் கொள்முதலில் கவனம் செலுத்தாமல் ஆவினில் முறுக்கு, மிக்சர், கேக், இனிப்பு வகைகளை விற்பனை செய்ய முயற்சி செய்து ஆவின் நிறுவனத்தை லாலா கடை போல் மாற்றியதன் விளைவு கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் நிலவியது போல் தற்போதும் ஆவினுக்கான பால் வரத்து கடுமையாக குறைந்து போயுள்ளது.

  விளைவு ஆவின் நெய், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, நெய் விநியோகம் தமிழகம் முழுவதும் முற்றிலுமாக முடங்கிப் போன நிலையில் பால் பாக்கெட் உற்பத்தியும் கடந்த சில மாதங்களாகவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த சில தினங்களாகவே தூத்துக்குடி, நெல்லை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிகவும் காலதாமதமான பால் விநியோகத்தால் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் ஆவின் பாலினை விநியோகம் செய்ய முடியாமலும், பல மணி நேரம் கடந்து வரும் ஆவின் பாலினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளாலும் பால் முகவர்கள் சொல்லெனா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

  தனியாருக்கு ஊக்குவிக்கும்  ஆவின் 

  ஆனால் இவை எதுவுமே தெரியாதது போல் தமிழக பால்வளத்துறையும், ஆவின் நிர்வாகமும் செயல்படுவது கடும் அதிர்ச்சியளிப்பதாக இருப்பதோடு,  தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த மெத்தனப்போக்கு கடைபிடிக்கப்படுகிறதோ..? என்கிற சந்தேகமும் கூடவே எழுகிறது.

  ஏற்கனவே திமுக ஆட்சியில் ஆவினை வளர விடமாட்டார்கள், தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக தான் நடந்து கொள்வார்கள்  என்கிற கருத்து பொதுமக்கள் மற்றும் பால் முகவர்கள் மத்தியில் நிலவி வரும் சூழலில் கடந்த 12மாதங்களில் 5முறை பால் விற்பனை விலையை தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்திய போது அதனை கட்டுப்படுத்தவோ,  ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணவோ அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை காணும் போது மேற்சொன்ன கருத்துக்கள் பலித்து விடுமோ..? என்கிற ஐயம் எழுவதை எங்களால் தவிர்க்க முடியவில்லை.

  மேலும் பால்வளத்துறை மீது உண்மையான அக்கறையும், ஆர்வமும் இல்லாத, வெறும் சுயவிளம்பர பிரியரை பால்வளத்துறை அமைச்சராக நியமித்ததின் விளைவு தான் தற்போதைய ஆவினின் வீழ்ச்சிக்கான முக்கிய  காரணம் என்றால் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


  எனவே தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் மற்றும் உற்பத்தி, விநியோகம் விவகாரத்தில் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துவதோடு, முதல்வர் அவர்கள் கேட்டுக் கொண்டால், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஆவின் விவகாரத்தில் திமுக அரசுக்கு ஏற்பட்டு வரும் அவப்பெயரை தடுத்து, ஆவினில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு, ஆவினை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தயாராக இருக்கிறது என்பதையும், முதல்வர் அவர்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும் சந்தித்து பேச தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad