வால்பாறையில் வரி செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி சேல் அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்,
கோவை : வால்பாறை நகராட்சிக்கு, வரிசெலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைத்த அதிகாரிகளை, மார்க்கெட் வியபாரிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறை நகரில் புதுமார்க்கெட் பகுதியில், மாதவாடகை அடிப்படையில் கடைகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை நகராட்சி கமிஷனர் பாலு உத்தரவின் பேரில், புதுமார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில், வாடகை செலுத்தாத மூன்று கடைகளை அதிகாரிகள் நேற்று காலை பூட்டி 'சீல்' வைத்தனர்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்கெட் வியாபாரிகள் 'சீல்' வைக்க வந்த அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் கூறியதாவது: நகராட்சிக்கு வாடகை செலுத்த மார்ச் மாதம் வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில் வியபாரிகளை பழி வாங்கும் நோக்கில், நகராட்சி அதிகாரிகள் திடீரென்று 'சீல்' வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்
வாடகை செலுத்த தாமதம் ஏற்பட்டாலும், எங்களது வைப்பு தொகையில் வாடகை பணத்தை பிடித்தம் செய்து கொள்ளலாம். அதை விடுத்து, கடைக்கு 'சீல்' வைப்பதை கண்டிக்கிறோம். வால்பாறை நகரில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு எந்தவித வாடகையும் செலுத்தாமல், நடைபாதையிலும், நகராட்சி இடத்தை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
வால்பாறைக்கு வெளியூர் வியாபாரிகள் வருவதை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புக்கடைகளால், மார்க்கெட் கடைகளில் வர்த்தகம் பாதித்து, மாதம் தோறும் கடை வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடை வாடகையை செலுத்த கெடுபிடி காட்டும் அதிகாரிகள், கடையை சீரமைக்க தயங்குகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினர். கடை வாடகை செலுத்த ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும். ஆக்கிமிப்பு கடைகளை விரைவில் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என, உறுதியளித்ததன் பேரில், வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
கருத்துகள் இல்லை