ராஜபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் சார்பில் ரூ. 12.81 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜோஸ்வா ரஞ்சித் என்பவர் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த செப்டம்பர் 25ம் தேதி வீட்டின் மாடியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கு அம்மா அமிர்தம்மாள் மற்றும் பள்ளியில் பயிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மறைவுக்கு பிறகு இவரது குடும்பத்தினர் வறுமையில் தள்ளப்படுவதை தவிர்க்க, 1997 ம் ஆண்டு 2 வது பேட்சில் இவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் டிஎஸ்பி ப்ரீத்தி மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரி நாதன் மற்றும் நெல்லை, தூத்துக்கு, மயிலாடுதுறை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சக காவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உயிரிழந்த காவலர் ஜோஸ்வா ரஞ்சித்தின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 2600 காவலர்களிடம் இருந்து திரட்டப்பட்ட ரூ. 12.81 லட்சத்தை அவரது இரண்டு மகன்களான பால்வசந்த், ரோஷன் பியாஸ் பெயர்களில் எல்ஐசியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்ட பாண்டு பத்திரங்களை சிறப்பு விருந்தினர்கள் குடும்பத்தினரிடம் வழங்கினர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை