வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை
கோவை: வரதட்சணை கொடுமையால், மனைவி தற்கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, குறிச்சி, வெங்கிடுசாமி லே - அவுட்டில் வசிப்பவர் புஷ்பராணி; பி.எஸ்.என்.எல் ஊழியர். இவரது மகள் தேவி, 25, பி.காம்., படித்து பணிபுரிந்து வந்தார்.தேவியும், சரவணம்பட்டி, சிவனாந்தாபுரத்தை சேர்ந்த யோகேஸ்வரன், 35, என்பவரும் காதலித்து வந்தனர்.
இருவருக்கும் 2016 மே. 19ல், திருமணம் செய்து வைத்தனர்.திருமணத்திற்கு பின், தேவிக்கும், மாமியார் கிருஷ்ணவேணிக்கும், 61, இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. புதிய தொழில் துவங்க, 5 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வருமாறு, தேவியிடம் யோகேஸ்வரன் கேட்டார். அதற்கு, கிருஷ்ணவேணியும் உடந்தையாக இருந்தார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
மனமுடைந்த தேவி, 2016ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சரவணம்பட்டி போலீசார் விசாரித்து, யோகேஸ்வரன், கிருஷ்ணவேணி ஆகியோரை கைது செய்து, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் நேற்று தீர்ப்புவழங்கினார் நீதிபதி நந்தினி தேவி.குற்றம் சாட்டப்பட்ட யோகேஸ்வரனுக்கு, ஏழாண்டு சிறை, 1,500 ரூபாய் அபராதம்; அவரின் தாய் கிருஷ்ணவேணிக்கு ஓராண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன்
கருத்துகள் இல்லை