Header Ads

  • சற்று முன்

    ஆவின் வரலாற்றில் முதன் முறையாக மாற்றுத்திறனாளிகள் தினத்திற்கு வாழ்த்துச் செய்தி

    உடலளவில் குறைகளோடு இருந்தாலும் மனதளவில் மிகத் தைரியசாலிகளாக, பல்வேறு துறைகளில் மாற்றங்கள் பல உருவாக்கும் வல்லமை கொண்ட மனவலிமை மிக்கவர்களாக விளங்கி, உலகளவில் மாற்றத்திற்கான திறன் படைத்தவர்களாக திகழும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் டிசம்பர்-3 பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

    உடல்ரீதியாக குறைபாடுகள் கொண்டவர்களுக்கு தேவை நம் கழிவிறக்கமோ, அனுதாபமோ அல்ல, அவர்களின் மனோதிடத்தை அதிகரிக்கும் உந்து சக்தியாக இருந்து, இந்த சமூகத்தில் அவர்களுக்கான நியாயமான தேவைகளை பூர்த்தி செய்து தந்து,  அனைத்து மக்களுக்கும் சரிநிகராக உயர்த்தி விடும் ஊக்கம் மட்டுமே தேவை. இதனை நாம் அனைவரும் மனதில் கொண்டு உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் மட்டுமல்ல காலத்தின் கட்டாயமாகும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

    டிசம்பர்-3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி "சிந்தனையில் மாற்றம்..!, சமூகத்தில் ஏற்றம்.!!" என்கிற வாசகத்துடன், தமிழக அரசின் முத்திரையுடன், மாற்றுத்திறனாளிகள் குறித்த இலச்சினையோடு (லோகோ) பால்வளத்துறை வரலாற்றில் முதன் முறையாக உலக மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துச் செய்தியை தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகளில்  வெளியிட்டிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது, தமிழக அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் மனதார பாராட்டுகிறது.

    அதேசமயம் பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்த நாடாக திகழந்து, உலகளவில் முதலிடத்தில் இருக்க வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட "பால்வளத்துறையின் தந்தை" என்றழைக்கப்படும் "கூட்டுறவு பொதுத்துறை நிறுவனத்தின் முன்னோடி" டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் - 26ம் தேதி இந்தியா முழுவதும் தேசிய பால் தினமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் பால்வளத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த தன் துறை சார்ந்த தினத்திற்கு ஆவின் நிறுவனம் "தேசிய பால் தினம்" வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் துறை தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வருகின்ற துறை என்பதாலும், தற்போது பால் கொள்முதல் வீழ்ச்சி, ஆவின் பச்சை பால் பாக்கெட்டுகள் தட்டுப்பாடு என பால்வளத்துறை அமைச்சர் மீதான அதிருப்தியில் இருக்கும் முதல்வரின் மனதை குளிர்விக்கும் வகையில் "தமிழக முதல்வருக்கு ஐஸ்" வைக்கும் விதமாகவே ஆவின் நிறுவனத்தின் வரலாற்றில் முதன் முறையாக வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டிருப்பதின் மூலம் பால்வளத்துறை அமைச்சர் தனது சுயநலத்திற்காக ஆவினை பயன்படுத்தி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

    எது எப்படியோ மாற்றுத்திறனாளிகளின் வலியையும், வேதனையையும், அவர்களின் மன உளைச்சலையும் நித்தமும் உடனிருந்து கண்டு உணர்ந்து வருபவர்கள் எனும் முறையில் அனைவருக்கும் வைக்கும் ஒரே கோரிக்கை அவர்களுக்கும் மனசு இருக்கு...., அவர்களுக்குள்ளும் ஆசா, பாசங்கள் இருக்கு,  எனவே அவர்களை உடல் குறைபாடுகளின் பெயரைச் சொல்லி அழைக்காமலும், தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியும், உதாரண பழமொழிகளை சொல்லி காயப்படுத்தாமலும்,  அவர்களை யாசகம் கேட்போராக பார்க்காமலும் சக மனிதர்களாக பாருங்கள் என்பது தான்.

    மேலும் ரயில், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கை, கால்கள் நன்றாக இருப்பவர்கள் கூட யாசகம் கேட்டு வரும் போது பிறர் முன்னிலையில் தங்களின் கெளரவத்திற்காக யாசகம் போடுவோர், அவ்விடங்களில் தங்களது உடல் ஊனத்தைக் கூட பொருட்படுத்தாமல் சுயமாக சம்பாதித்து, சொந்த காலில் நின்று சுயமரியாதையோடு வாழ நினைக்கும் மாற்றுத்திறனாளிகள் விற்பனை செய்யும் சிறு, சிறு பொருட்களை கூட வாங்கி ஊக்குவிக்காமல், அவ்விடத்தை விட்டு கடந்து செல்லாமல் அவர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் சுயமரியாதையோடு வாழவும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க சபதமெடுப்போம்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு கரம் கொடுப்போம்.! ஊக்குவிப்போம்..!!உயர்த்துவோம்...!!! 

    மாற்றத்திற்கான திறன் படைத்தோர் அனைவருக்கும் "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நல் வாழ்த்துகள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad