ராஜபாளையம் அருகே அனுமதியின்றி மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த 2 சிலுவைகள்
ராஜபாளையம் அருகே அனுமதியின்றி மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த 2 சிலுவைகள் ஆட்சியர் உத்தரவின் பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினரால் அகற்றப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் பாரதி நகர் அருகே கூமாச்சி மலை அமைந்துள்ளது. முத்துசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மலை உச்சியில் அப் பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக இரும்பிலான இரண்டு சிலுவைகளை நட்டுள்ளார்.
பல்வேறு மதம் மற்றும் சமுதாயங்கள் வசிக்கும் இப் பகுதியில் குறிப்பிட்ட மத அடையாளம் மலை உச்சியில் இருப்பதால் மத ரீதியான மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக போலீசார் ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளனர்.
இந்த அறிக்கை குறித்து கடந்த மாதம் 30ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாதாந்திர சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் அரசு நிலத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட இரண்டு சிலுவைகளையும் அகற்ற ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து இன்று பிற்பகலில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மலை உச்சியில் இருந்த இரண்டு சிலுவைகளையும் அகற்றினர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை