Header Ads

  • சற்று முன்

    அய்யலூரில் கொடிகட்டி பறக்கும் சட்டவிரோத போலி மது விற்பனை பொங்கும் பொது மக்கள்! புலம்பும் சமூக ஆர்வலர்கள்!

    மக்களுக்கு தீமை விளைவிக்கும் எந்த விசயத்தையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையேல் அது புற்றுநோய் போல புரையோடி இந்த சமூகத்தையே பாழ்படுத்தி விடும். அதிலும் கள்ளச் சாராயம் புழங்குவதை கண்டுகொள்ளாமல் கடந்தால் அது மனித உயிர்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  அப்படியான ஒரு அசம்பாவிதம் ஏதும் அய்யலூர் பகுதியில் நடந்துவிடுமோ என்றுதான் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அஞ்சி வருகின்றனர். 


    திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் இருந்த டாஸ்மாக் கடையை நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதாக சொல்லி கடந்த அதிமுக ஆட்சியில் தற்காலிகமாக சித்துவார்பட்டி பஞ்சாயத்து பாலக்குறிச்சி அருகே ஒரு மேட்டில் கொண்டுபோய் வைத்தார்கள். அய்யலூரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அக்கடைக்கு போய் வருவதை சிரமமாய் உணர்ந்த குடிமகன்கள் அய்யலூருக்குள்ளேயே மது வகைகள் கிடைத்தால் பரவாயில்லை என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டனர். அப்போதைய அரசும் அய்யலூருக்குள்ளேயே வேறு இடம் பார்த்து கிடைக்காமல் போனதால் சலித்துப்போய் கடை அங்கேயே இயங்கட்டும் என்று விட்டுவிட்டனர். தற்போது திமுக ஆட்சியிலாவது கடை மாற்றப்படும் என்று மதுவிரும்பிகள் நம்பியிருந்தனர். ஆனால் தற்போதைய ஆளுங்கட்சி நபர்களும்  'சரி செய்யப்' பட்டுவிட்டதால் கடை அதே இடத்தில் இன்றளவும் இயங்கி வருகிறது.

    இந்தக் கடையால் அய்யலூரில் இருந்து  எரியோடு செல்லும் ரோட்டில் ஏற்பட்ட சாலை விபத்துக்களும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் ஏராளம். பலர் உடல் ஊனமுற்றவர்களாய் அன்றாடம் வெந்து நொந்து கண்ணீரும் கம்பளையுமாய் காலம் தள்ளி வருகின்றனர். 

    இது ஒருபுறமிருக்க, தற்போது கடையின் தூரத்தை காரணம் காட்டி அய்யலூருக்குள்ளும் அய்யலூரைச் சுற்றியும் 'சில்லிங் பாயிண்ட்' கள் என்ற பெயரில் சட்டவிரோத மது விற்பனைகள் கொடிகட்டி பறக்கத் துவங்கியுள்ளது. யார் பாலக்குறிச்சி மேட்டுக்கு போய் திரும்புவது என்ற சலிப்பில் அருகிலேயே கிடைக்கும் 'போலி' மதுக்களை வாங்கி குடிக்கும் பழக்கத்திற்கு மது விரும்பிகள் வந்துவிட்டனர். வெளியிலிருந்து கூலிக்கு வேலை பார்க்க அய்யலூருக்கு வரும் விழிம்புநிலை தொழிலாளிகள் தங்களின் உடல் அலுப்பை போக்கிக்கொள்ள 'கட்டிங் கட்டிங்காக' போட்டு போட்டே உடலையும் உள்ளத்தையும் நாசமாக்கி கொள்கின்றனர்.  குறிப்பாக அய்யலூர் தும்னிகுளம் கரையருகே (இந்தியன் வங்கிக்கு பின்புறம்) செயல்படும் சட்டவிரோத மது விற்பனை கூடம் மினி டாஸ்மாக் ரேஞ்சுக்கே அப்பட்டமாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. குவாட்டருக்கு 50 முதல் 100 ரூபாய் வரை சேர்த்து விற்கப்படும் இந்த மது வகைகள் பணம் பார்கும் நோக்கத்தோடு முற்றிலும் கலப்படம் செய்யப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. இந்த கடைக்கு வரும் குடிமகன்கள் மதுவை அருந்திவிட்டு பாட்டில்களை குளத்துக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் வீசிச் சென்றுவிடுவதால் குளத்து கரையோரங்களில் எல்லாம் உடைந்த பாட்டில்களின் கண்ணாடிச் சில்லுகள் பாதங்களை பதம்பார்க்கும் நோக்கத்தோடு பளபளக்கின்றன.  முன்னரெல்லாம் போலி மது விற்பவர்கள் கண்கள் நிறைய பயத்தோடும் குற்ற உணர்வோடும் வேலியோரங்களிலும் முற்புதர்களுக்குள்ளும் உட்கார்ந்து கொண்டு விற்பார்கள். ஆனால் அய்யலூர் நிலையே வேறு! அரசு மதுபானக் கடைக்கு கூட நேரங்காலம் உண்டு. இந்த போலி மதுவோ 24 மணி நேரமும் கிடைக்கிறது. அதுவும் தேசிய நெடுஞ்சாலைக்கு சில அடிகள் தூரத்திலேயே! முன்பு, அரசு டாஸ்மாக்கையே தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதாக சொல்லி மாற்றினார்கள். இன்று அரசு டாஸ்மாக் கடை எங்கோ காட்டிற்குள் கிடக்க, அரசுக்கு எதிரான உயிர்போக்கும் போலி மது விற்குமிடங்கள் இன்று இதுபோன்று தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே இருப்பதை கண்டுகொள்ளவோ தட்டி கேட்கவோ ஒருவருக்கும் துப்பில்லை...' என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  அரசுக்கு வருவாய் இழப்பையும், அவப்பெயரையும், பொதுமக்களுக்கு விபத்துக்களையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் இத்தகைய போலி மது விற்பனையை அடியோடு ஒழித்து அதில் ஈடுபட்ட விஷமிகள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பொது மக்களிடையே வலுத்து வருகிறது.

    செய்தியாளர் வி காளமேகம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad