Header Ads

  • சற்று முன்

    சிறு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது! தமிழ்நாடு அரசு தெளிவு படுத்த வேண்டும் !

    பத்திரிகையாளர்கள் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம். பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்வதற்கான விண்ணப்ப படிவம். ஆகிய இரண்டு விண்ணப்ப படிவங்களையும் தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. இவை இரண்டுமே பத்திரிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிறு பத்திரிக்கைகளை முழுமையாக ஓரங்கட்டும் வகையில் அமைந்துள்ளது.  என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்  மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேற்கண்ட இரு அம்சங்களிலும் அரசு சார்பில் பத்திரிகையாளர்களுக்கு தெளிவு படுத்த வேண்டியவைகளும் இருக்கின்றன. அதேபோன்று பத்திரிகையாளர்கள் சார்பில் அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டிய விபரங்களும் இருக்கின்றன.

    பத்திரிக்கையாளர்கள் என்பவர்கள் யார்?

    தமிழக அரசு  எந்த அடிப்படையில் பத்திரிகையாளர்களை வரையறுக்கிறது?பத்திரிகைத் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் அனைவருமே பத்திரிகையாளர்கள்தான். ஆனால் செய்தியாளர்களை மட்டும்  தனியாகப் பிரித்து, அதிலும் வடிகட்டி எண்ணிக்கையைச் சுருக்கி, விரல் விட்டு எண்ணக்கூடிய செய்தியாளர்கள் மட்டுமே பத்திரிகையாளர்கள் என்று அரசு வரையறுப்பது எந்த வகையில் நியாயம் ? பத்திரிகையாளர்கள் அடையாள அட்டை மற்றும் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் ஆகியவற்றை அரசு எந்த நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகிறது? பத்திரிகையாளர்கள் போராடிப் பெற்ற சில சலுகைகளை பத்திரிக்கையாளர்கள் பெறுவதற்கு அரசு அடையாள அட்டை பெறுவதை முன் நிபந்தனையாக்கப்படுவது எந்த வகையில் நியாயம?

    இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசு சார்பில் விளக்கம் அளித்து தெளிவு படுத்த வேண்டியது அவசியம். 2023 ஆம் ஆண்டிற்கான பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டை பெறுவதற்கான வழி முறையில் அதற்கான விண்ணப்ப படிவத்தில் இரண்டு வகையான கடுமைகள் கட்டப்பட்டுள்ளன.

    1. நிறைவேற்ற முடியாத விதிமுறைகள். 2. இந்த ஆண்டு முதலே அமல்படுத்த வேண்டும் என்பது. இந்த இரண்டுமே அரசு பத்திரிகையாளர்களை எப்படி நடத்த நினைக்கிறது? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அடையாள அட்டை பெறுவதற்கான விதிமுறைகள் கடந்த காலங்களைக்  காட்டிலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.இது பத்திரிகையாளர்களை வடிகட்டும் விதமாக அதிலும் குறிப்பாக சிறு, குறு பத்திரிக்கையாளர்களை ஜமுக் காளத்தில் வடிகட்டும் விதமாக அமைந்துள்ளது. அடையாள அட்டை விண்ணப்ப படிவத்தோடு இணைக்கப்பட வேண்டியவை என்பதில். பத்திரிகையாளர்களின் பணி நியமன ஆணை. பத்திரிக்கையாளர்களின் கல்விச் சான்றிதழ். வங்கி மூலம் ஊதியம் பெறுவதற்கான சான்று. மூன்று ஆண்டுகளுக்கான  ஆடிட்டர் மூலம் வரவு செலவு கணக்கு.காலம் முறை இதழ்கள் 10000. பிரதிகள் அச்சடித்ததற்கான. அச்சக பில்கள்.

    இது போன்ற விதிமுறைகள் நடைமுறையில் நிறைவேற்றப்படுவது மிகவும் கடினமான ஒன்று.  இது அரசு அறியாத ஒன்றல்ல. பத்திரிகையாளர்கள் அரசுக்கு தெளிவு படுத்த வேண்டிய விவரங்கள் வருமாறு. அடையாள அட்டை பெறுவதற்கான தற்போதுள்ள விதிமுறைகளை பெரிய பத்திரிக்கை நிறுவனங்களே நிறைவேற்ற முடியாது என்கிற நிலையில் சிறு, குறு பத்திரிக்கைகள் எவ்வாறு நிறைவேற்ற இயலும்?

    மஜிதியா சம்பளக் குழு பத்திரிக்கையாளர்களுக்கு பரிந்துரைத்த ஊதியத்தை பெரிய பத்திரிகை நிறுவனங்களே கூட நிறைவேற்றுவதில்லை. சமீப காலங்களில் பெரிய பத்திரிகை நிறுவனங்களில் காண்ட்ராக்ட் (Contract)  முறையில் பத்திரிகையாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள். இவர்களுக்கு நேரிடையாக பத்திரிக்கை நிறுவனங்கள் சம்பளம் கொடுக்காது. ஒப்பந்த தாரர்கள் மூலமே ஊதியம் கொடுக்கப்படுகிறது.

    நிலைமை இப்படி இருக்க வங்கிகள் மூலம் சம்பளச் சான்றிதழ் எவ்வாறு தர இயலும்?

    பத்திரிகையாளன் என்பவன் யார் ? பத்திரிகையாளனின் நோக்கம் என்ன ?

    பத்திரிகையாளன் என்பவன் சமூகப் பொறுப்புள்ளவன். சமுதாயத்தை அறிந்து புரிந்து சமுதாயத்தை பிரதிபலிப்பவன். பத்திரிக்கையாளர் நோக்கம் சமுதாயத்தை முன்னேற்றுவது அடிப்படையில் சமுதாயத்தை மாற்றி அமைப்பது என்பதாகும்.

    " அறிவுக்கண்ணை சரியாகத் திறந்தால்  பிறவிக் குருடனும் கண் பெறுவான்"  

    - என்ற பட்டுக்கோட்டையின் வரிகளுக்கு ஏற்ப ,,,

    ” காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்” - என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்பவும். பத்திரிகையாளர்களின் செயல்பாடு அமைய வேண்டும். இந்திய விடுதலைப் போர் காலகட்டத்தில்  ”ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை”  - என்ற ஒற்றை லட்சியம், அதற்கான போராட்டமும் பத்திரிக்கைகளுக்கு இருந்தது. விற்பனை எண்ணிக்கை, வணிக நோக்கு பிரதானமாக இருக்கவில்லை. இந்திய விடுதலைக்குப் பின்பும் இந்தியச் சமூகம் பொருளாதார , சமூக விடுதலை பெறவில்லை.

     உழைப்பு சுரண்டல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக் கொண்டே வந்ததால்  வர்க்க முரண்பாடும் கூர்மை அடைந்தே வருகிறது. ஊடகம் , பத்திரிக்கை துறையிலும் இத்தகைய வர்க்க முரண்பாடுகள் தவிர்க்க முடியாது. விற்பனை எண்ணிக்கை என்பதோடு வணிக நோக்கமும் சேர்ந்து கொண்டது. தற்போது பெரிய பத்திரிகைகள், பெரிய ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தில் இருக்கிறது. இவைகளின் செயல்பாடு அடிப்படையில் கார்ப்பரேட்டுகளின் நலன்களை பிரதிபலிப்பாகவே இருக்கும்.

    உழைக்கும் மக்களின் நலன் மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர்களின் நலன் இவைகள் பற்றி கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் கவலைப்படாது. - இது அரசுக்கு தெரியாத ஒன்றல்ல. நன்றாகவே தெரியும்.

    அரசின் செயல்பாட்டின் நோக்கங்கள் கார்ப்பரேட் பத்திரிகை நிறுவனங்களுக்கா ? அல்லது உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கா ? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். சிறு பத்திரிகைகளின் உழைக்கும் பத்திரிக்கையாளர்களை ஓரங்கட்டுவது என்பது சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் விளிம்பு நிலை மக்களை ஓரங்கட்டப்படுவதற்கு ஒப்பாகும்.

    சிறு பத்திரிகைகளை பொறுத்த அளவில் பெரும்பாலும் வணிக நோக்கில் செயல்படுவது இல்லை. 

    நியூஸ் பிரிண்ட் பேப்பர், அச்சுக் கூலி, விநியோகச் செலவு, நிர்வாகச் செலவு என்று கணக்கிட்டால் பத்தாயிரம் பிரதிகள் அச்சடித்தாலும் சிறு பத்திரிக்கைகளுக்கு நஷ்டமே ஏற்படும். பத்திரிக்கை நடத்தவே முடியாது.

    காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என்று மீடியாக்கள் விரிவுபட்ட நிலையில் சிறு பத்திரிக்கைகள் எவ்வாறு தாக்குப் பிடிக்க முடியும்?

    நஷ்டத்தோடு இயங்கும் சிறு பத்திரிக்கைகள் 10,000 பிரதிகள் எப்படி அச்சடிக்க முடியும்?

    மிக மிக குறைவான செலவில் நஷ்டத்தோடு நடத்தப்படும் சிறு பத்திரிக்கைகளுக்கு ஆடிட்டர் மூலம் கணக்கு தர முடியுமா?

    அதுவும் மூன்றாண்டு கணக்கை இப்போதே கேட்பது எந்த வகையில் நியாயம்?

    ஒரு சிலவற்றை தவிர்த்து பல்வேறு சிறுபத்திரிக்கைகள் சமூகப் பொறுப்புணர்வுடன், மக்கள் நலனை முன்வைத்து, ஜன நாயகத்தின் நான்காவது தூண்களாக  செயல்படுகின்றன. நஷ்டத்தை ஈடுகட்ட எல்லா வகையிலும் செலவுகளை குறைக்கும் கட்டாயம் சிறு பத்திரிக்கைகளுக்கு ஏற்படுகிறது. இதில் ஊதியமும் ஒன்று. எனவே சிறு பத்திரிக்கைகளில் ஊதியம் பிரதானமானதாக இருக்காது சமூகப் பொறுப்புணர்வு என்ற நோக்கம் பிரதானமாக இருக்கும்.  

    ஊதியம் வாங்காமலும் குறைந்த ஊதியத்திலும் அதுவும் தொடர்ந்து பெற முடியாமலும் அர்ப்பணிப்பு முறையில் செயல்படும் சிறு குறு பத்திரிகையாளர்கள் அதிகம். இவர்களை சம்பளம் என்ற வரையறைக்குள் அதுவும் வங்கி மூலம் பெற வேண்டும் என்று கொண்டு வருவது நடைமுறைக்கு எப்படிப் பொருந்தும்?

    ”  கற்பது என்பது 'ஞானம் ' கற்பித்தல் என்பது 'கடமை' இந்த இரண்டுமே மக்களிடமிருந்து தான்” - என்றார் தத்துவஞானி கன்பூசியஸ்.

    கல்வித் தகுதி என்பதை விட பத்திரிக்கையாளர்களுக்கு சமுதாய ஞானம் மற்றும் அனுபவங்களே போதுமானது ! பொருத்தமானது.  சிறு பத்திரிக்கையாளர்களின் இந்த யதார்த்த உண்மை நிலையை அரசு புரிந்து கொள்ள வேண்டும். சிறு பத்திரிக்கையாளர்களை கை தூக்கி உதவிட அரசு முன்வர வேண்டும்.

    அந்த வகையில் சிறு மற்றும் குறு பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டை பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். நடப்பு ஆண்டிலிருந்து அமலுக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை. அடுத்த ஆண்டிலிருந்து அமலுக்கு கொண்டு வர வேண்டும்.

    தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் கீழ்க்கண்ட ஆலோசனைகளை அரசுக்கு முன் வைக்க விரும்புகிறோம்.

    அனைத்து பத்திரிகைகளும் RNI பதிவு பெற்றிருக்க வேண்டும்.

    ஆண்டுதோறும் RNI பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.  பணியாற்றும்  பத்திரிக்கை நிறுவனங்களிடமிருந்து பணியாற்றுவதற்கான சான்றும், அனுபவச் சான்றிதழும் தரப்பட வேண்டும். பத்திரிகைகள் நிற்காமல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்க வேண்டும். தலைமைச் செயலகம்  லோக்கல் காவல் நிலையம், உள்ளாட்சி அலுவலகங்கள்,  கிளை, நூலகங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டும்.

    3000 பிரதிகளுக்கு குறையாமல் அச்சடித்தது விநியோகிக்க வேண்டும்.

    இவற்றை அரசு சீராக கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் .

    அரசு அடையாள அட்டை வழங்குவதில் Acredition Card- Press Pass என்ற பேதம் தேவையில்லை. ஒரே அடையாள அட்டையாக வழங்க வேண்டும் . இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி உரிய முறையில் மாற்றம் கொண்டு வரும் என்று நம்புகிறோம்! அரசின் நோக்கங்களில் முக்கியமான ஒன்றை பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு புரிந்து கொள்கிறது. பத்திரிகைத் துறைக்கு சம்பந்தமில்லாதவர்கள், எந்தப் பத்திரிக்கையிலும் பணியாற்றாதவர்கள், பத்திரிகை அச்சடிக்காமல் டம்மி மட்டும் போட்டுக்கொண்டு அதை நகலெடுத்து ஏமாற்றுபவர்கள் மற்றும் குறுக்கு வழியில் புகுந்து அடையாள அட்டை பெற முயற்சிப்பவர்கள் இருக்கிறார்கள்.

    இவர்கள் கண்டிப்பாக கண்காணிக்கப்பட்டு தடுக்கப்பட வேண்டும். தண்டிக்கப்படவும் வேண்டும். இதில் எங்களது தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்புக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

    போலி பத்திரிகையாளர்களை, ஏமாற்று பத்திரிக்கையாளர்களை தடுப்பதில் எங்களது பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு அரசுக்குத் துணை நிற்கும்..

    சமூகப் பொறுப்புணர்வு என்ற நோக்கத்தோடு செயல்படும் உண்மையான சிறு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஒன்று பட்டு நிலை எடுத்துச் செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் நல வாரியத்தை பொருத்தவரையில் எங்கள் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் கீழ்க்கண்டவற்றை முன் வைக்கிறோம்.

    நலவாரியத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக அமைய வேண்டும்.

    நல வாரியத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்த பத்திரிகையாளர் சங்கங்களை அரசு அழைத்துப் பேச வேண்டும்.

    நல வாரியத்திற்கான நிதி எங்கிருந்து வருகிறது? என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும்.

    ஊடக நிறுவனங்களில் பெறப்படும் விளம்பரங்களில் 5 சதவீதம் நலவாரியத்திற்கு சேர வேண்டும்.

    பெரிய ஊடக நிறுவனங்களின் ஆண்டு வருமானத்தில் 3 சதம் நல வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டும். ஆண்டுதோறும் அரசு சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை நல வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டும். நலவாரிய குழு ஜனநாயகமாக ஆக்கப்பட வேண்டும் அதில் அலுவல் சாரா பிரதிநிதிகளின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்பட வேண்டும். மற்ற நலவாரியங்களைப் போன்று பத்திரிக்கையாளர் நல வாரியத்திலும் முத்தரப்பு பிரதிநிதித்துவத்தில் பத்திரிகையாளர் சங்கங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சமூகப் பொறுப்புணர்வோடு பல்வேறு பத்திரிக்கையாளர் சங்கங்களை கூட்டமைப்பாக ஒருங்கிணைத்து செயல்படுகிறது. பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. பத்திரிக்கையாளர்கள் ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக ஓராண்டை வெற்றிகரமாக கடந்து செயல்பட்டு வருகிறது.

    பதிவுபெற்ற கூட்டமைப்பாக விளங்கும்,  தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்புக்கு நல வாரியத்தில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய பெஞ்ச் பத்திரிக்கையாளர்  சம்பந்தமாக தமிழ்நாடு அரசுக்கு  உத்தரவு வழங்கியது வழங்கியது.  இதற்குப் பின்பு ஏற்பட்ட சூழல் காரணமாக பத்திரிகையாளர் சங்கங்கள் ஒன்றுபடும் தேவை ஏற்பட்டது

    2021 ஆகஸ்ட் 30 ம் தேதி சென்னை செங்குன்றத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு துவங்கப்பட்டது.

    14. 12. 2021 ல் தமிழ்நாடு அரசு செய்தித்துறை இயக்குனர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆகியோருக்கு முறைப்படி கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

    9.2. 2022 ல் போராட்டம் நடத்தப்படுவது குறிதது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு (பிரஸ் மீட்) நடத்தினோம் .

    11. 2. 2022 ல் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி " கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் " நடத்தினோம்.

    21, 3.  2022 -ல் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கைத்துறை இயக்குனர் மற்றும் அமைச்சர் ஆகியோரை சந்தித்து நேரடியாக பேசினோம்.

    24 10. 2022 ல் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பத்திரிக்காளர் சந்திப்பு ( பிரஸ் மீட்) நடத்தினோம்.

    29.10 2022 ல் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் " 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்தினோம். 16.11.2022 புதன்கிழமை மாலை 4 மணிக்கு அசோக் நகர் ஜீவா ஹாலில் " தேசிய பத்திரிக்கையாளர் தினம் " மற்றும் " நலம் பயக்குமா நலவாரியம்? " என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினோம்.

    தற்போது பத்திரிகையாளர்களின் நிலை குறித்து விரிவான கோரிக்கை மனுவை தங்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். போலி மற்றும் ஏமாற்று பத்திரிகையாளர்களை களை எடுக்கிறோம் என்ற பெயரில் சிறு பத்திரிக்கையாளர்களை களையெடுக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். பத்திரிக்கையாளர் அடையாள அட்டை வழங்குவதிலும், நலவாரிய பயன்களை பெறுவதிலும் பெருவாரியான பத்திரிகையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசின் அணுகுமுறை அமைய வேண்டும்.

    இளசை கணேசன்

    ( மாநிலத் தலைவர் 

    தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு) 

    நன்றி ஜனசக்தி 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad