Header Ads

  • சற்று முன்

    சிவகாசி அருகே, ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

    சிவகாசி :  சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தி சிவகாசி அருகேயுள்ள ஆனையூர் ஊராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆனையூர் ஊராட்சியில், கட்டளைபட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளும், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, ஒரு சுகாதார வளாகம் கட்டப்பட்டிருந்தது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், பல மாதங்களாக சுகாதார வளாகம் சிதைந்து, செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் இந்தப்பகுதி மக்கள் காலைக்கடனை கழிப்பதற்காக திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய அவலம் இருந்து வருகிறது. சேதமடைந்துள்ள சுகாதார வளாகத்தை அகற்றிவிட்டு, புதிய சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும் என்று இந்தப்பகுதி மக்கள் பல மாதங்களாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய சுகாதார வளாகம் கட்டிட வலியுறுத்தி, கட்டளைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து, ஆனையர் ஊராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்த, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற (பொ) தலைவர் முத்துமாரி தங்கபாண்டியன், ஊராட்சி செயலாளர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மாத காலத்தில் புதிய சுகாதார வளாகம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad