மதுரை மாவட்ட மாட்டு தீவனத்துக்காக அங்கன்வாடியிலிருந்து சத்துணவு மாவு மூட்டைகள் நள்ளிரவில் கடத்தல்
மாட்டு தீவனத்துக்காக அங்கன்வாடியிலிருந்து சத்துணவு மாவு மூட்டைகள் நள்ளிரவில் கடத்தல் - இரவு நேரத்தில் அங்கன்வாடியை திறந்து கடத்தப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி
மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அங்கன்வாடிகளிலும் கர்ப்பிணி பெண்களுக்கு மாதந்தோறும், 2கிலோ சத்துமாவு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு மாவு உருண்டை வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் அங்கன்வாடி மையங்களில் இருந்து சத்துணவு மாவுகள் கடத்தப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது.
அதன்படி மதுரை மாநகராட்சி 74 வது வார்டுக்கு உட்பட்ட பழங்காநத்தம் வடக்கு தெரு பகுதி உள்ள அங்கன்வாடி மையத்திலிருந்து நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் அங்கன்வாடியை நள்ளிரவில் திறந்து அங்கிருந்து ஒரு தலா 25கிலோ பாக்கெட்டுகள் அடங்கிய 16 மூட்டைகளை கடத்தியுள்ளனர். இந்நிலையில் சத்துணவு மாவு பாக்கெட்டுகள் கடத்தப்படுவதை அந்த பகுதி பொதுமக்கள் புகைப்படமாக எடுத்து காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.
இந்த சத்துணவு மாவு கடத்தல் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள மாடு வளர்க்கும் நபர் ஒருவருக்கு அங்கன்வாடி பணியாளர்களின் உறவினர்கள் உதவியோடு மாடுகளுக்கு வழங்குவதற்காக கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பழங்காநத்தம் பகுதியில் குழந்தைகளுக்கு சத்துணவு மாவு வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு மாவு பாக்கெட்டுகளை மூட்டை மூட்டையாக கடத்திசென்று மாடுகளுக்கு வழங்கியது தொடர்பாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் அங்கன்வாடி அலுவலகத்தை முற்றுகையிட்டு கடத்தல் குறித்து பணியாளர்களிடம் கேட்டபோது உரிய விளக்கம் அளிக்காத நிலையில் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியானதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் அங்கன்வாடிக்கான சாவி எப்படி கிடைத்தது ? இந்த கடத்தலுக்கு பின்புலம் யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை