Header Ads

  • சற்று முன்

    மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் முடிந்தது.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க, கெட்டிமேளம் கொட்ட மகேந்திரன், தீபாவுக்கு தாலி கட்டினார்.

    மனநல சிகிச்சைக்காக வெவ்வேறு திசைகளில் இருந்து வந்து சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று தங்களின் வாழ்க்கைப் பயணத்தை தொடங்க உள்ளனர் மகேந்திரன் - தீபா ஜோடி. இரண்டு
    ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும், வேலூரை சேர்ந்த 36 வயதான தீபாவும் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மனதளவில் பாதிப்பு மற்றும் தந்தை இறந்த சோகத்தில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான மன அழுத்தம் ஆகிய வெவ்வேறு காரணங்களால் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெறத் தொடங்கினர். மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவர்களுக்கு அளித்த தொடர் சிகிச்சையின் பலனாக மன அழுத்தம் நீங்கி, மன நோயிலிருந்து விடுபட, இருவரும் காப்பகத்தில் உள்ள Care centre-ல் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.பில் வரை படித்துள்ள மகேந்திரன் காப்பகத்தின் உள்ள நோயாளிகளுக்கான பயிற்சி மையத்தில் பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆசிரியர் படிப்பு முடித்த தீபாவும் அதே காப்பகம் சார்பில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    ஆரம்பத்தில் தந்தையை இழந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்தபோது முதல் பார்வையிலேயே மகேந்திரன் தீபாவிற்கும் காதல் பற்றிக்கொண்டது. முதல் சந்திப்பிலேயே மகேந்திரன் 'திருமணம் செய்து கொள்ளலாமா' எனக் கேட்க, சற்றே தயங்கிய தீபா சிறிது காலத்திற்குப் பிறகு தன் காதலை ஏற்றுக் கொண்டதாக புன்னகையுடன் தெரிவித்தார் மகேந்திரன். தந்தையின் பிரிவை தாங்க முடியாத சூழலில் மனநோய்க்கு ஆளான தனக்கு மகேந்திரனே மருந்தாக கிடைத்ததாக நெகழ்ச்சியுடன் தெரிவித்தார் தீபா. ஆரம்பத்தில் இருவரது காதலுக்கும் மனநல காப்பகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. இருவரும் முழுமையாக சிகிச்சையில் இருந்து குணமடைந்த பிறகு காதலை ஏற்று இன்று (28ம் தேதி) இருவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்திற்கு இருவீட்டார் சம்மதம் தெரிவித்து உள்ளனர். மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் முடிந்தது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க, கெட்டிமேளம் கொட்ட மகேந்திரன், தீபாவுக்கு தாலி கட்டினார். இந்த திருமணத்திற்கு இருவீட்டார் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad