Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே இடைசெவலில் கி.ராஜா நாரயணன் பயின்ற பள்ளி ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு காணொளி காட்சி வாயிலாக முதல்வரால் திறக்கபட்டது.


    கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் கடந்த 2021-ம் மே 18-ல்  புதுச்சேரியில் காலமானார். அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் தமிழக அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் படித்த பள்ளியான இடைசெவலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் பள்ளியில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில், பள்ளியின் முகப்பு சுவர், உட்பகுதியில் உள்ள சுவர்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த பள்ளியை இன்று  சென்னையில் இருந்து காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

    இதைதொடர்ந்து இடைசெவல் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் கூடுதல் ஆட்சியர் சரவணன் கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளியில் குத்துவிளக்கேற்றி பள்ளி வளாகத்தையும், அங்குள்ள அலமாரியில் இருந்த கி.ரா.வின் புத்தகங்களையும் பார்வையிட்டார். பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.



    விழாவில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சுப்புலட்சுமி, எழுத்தாளர் கி.ரா. மகன் பிரபி, இடைசெவல் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad