Header Ads

  • சற்று முன்

    சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.18 கோடி தங்கம் பறிமுதல்

    சென்னை: மும்பையில் இருந்து சென்னை வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 2 பயணிகள் பெருமளவு கடத்தல் தங்கத்துடன் சென்னைக்கு வந்து கொண்டு இருப்பதாகவும், இந்த கடத்தல் தங்கம் வெளிநாட்டிலிருந்து மும்பை வழியாக உள்நாட்டு விமானத்தில் சென்னைக்கு வருவதாகவும், சென்னை விமான நிலையம் சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படையினர், நேற்று இரவு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து தயார் நிலையில் காத்திருந்தனர். மும்பையிலிருந்து வரும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் இரவு 8.30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கி வெளியில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பெயரில் இரண்டு மும்பை பயணிகளை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் நாங்கள் உள்நாட்டுப் பயணிகள் எங்களை எப்படி சுங்கத்துறையினர் வந்து சோதனை போடலாம் என்று வாக்குவாதம் செய்தனா்.

    அதற்கு சுங்கத்துறையினர், நாங்கள் சந்தேகப்பட்டால் எங்கும் வந்து சோதனை நடத்த எங்களுக்கு உரிமை உண்டு என்றனா். அதோடு இரண்டு பயணிகளின் கைப்பைகளை திறந்து பார்த்து சோதனை நடத்தினார். கைப்பைகளில் மொத்தம் 27 தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மொத்த எடை 2.7 கிலோ. சர்வதேச மதிப்பு ரூ. 1.18 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இதையடுத்து சுங்கத்துறையினர் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். அதோடு 2 மும்பை பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். வெளிநாட்டிலிருந்து மும்பைக்கு இந்த தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்து, அதன் பின்பு சென்னைக்கு உள்நாட்டுப் பயணிகளாகக் கொண்டு வருகின்றனர் என்று தெரிய வந்தது

    உள்நாட்டுப் பயணிகளுக்குச் சுங்கச் சோதனை இல்லை என்பதால் சுலபமாகத் தப்பித்துச் சென்றுவிடலாம் என்று இவர்கள் இவ்வாறு தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்துள்ளனர் என்றும் தெரிய வந்தது. இந்த தங்கக்கட்டிகள் எந்த நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டது. இவர்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்? என்று சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad