சென்னை மாதவரம் அடுத்த புழல் பகுதியில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை மாதவரம் அடுத்த புழல் பகுதியில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மூன்றரை கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் அடையாளம் கண்டறிந்து போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா வியாபாரிகளையும், விநியோகம் செய்யும் நபர்களையும் சுற்றி சுற்றி பிடித்து வருகின்றனர். மேலும், தலைநகர் சென்னையில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு கிலோ கணக்கில் கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து வருவதுடன், அதில் தொடர்புடைய கும்பலை பொறிவைத்து காவல்துறை பிடித்து வருகிறது. இதனிடையே, சென்னை மாதவரம் அடுத்த புழல் பகுதியில், கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாகவும், இதனால் அப்பகுதி உள்ள இளைஞர்களும், சிறுவர்களும் மிகவும் பாதிப்பு அடைந்து வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலத்தின் அருகில் புழல் காவல் ஆய்வாளர் சோபனா தேவி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் மூன்றரை கிலோ பதுக்கி வைத்து கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தவர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சீனிவாசன் என்பதும், இவர் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் அம்பலமானது. இதனையடுத்து சீனிவாசனை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. கஞ்சா மட்டுமின்றி அரசினால் தடை அனைத்துப் போதைப் பொருட்களையும் முற்றிலும் புழக்கத்திலிருந்து ஒழித்து, வருங்கால இளைய தலைமுறையினரை தீய பழக்க வழக்கங்களிலிருந்து காக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
கருத்துகள் இல்லை