தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை குவிக்கும் முற்போக்கு சிந்தனையாளர் வெற்றிமாறனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
சாதி ஏற்றத்தாழ்வுகள் கல்வி அறிவின் அவசியம் ஆகியவற்றை இத்தனை எளிதாய் சொல்லிவிட்ட இயக்குனர் ஒருவரை தேடிப் பார்க்கவேண்டும் என்ற அளவிற்கு ஜனரஞ்சகமும், நேர்த்தியும் இணைந்த ஒரு இயக்குனர் வெற்றிமாறன்.இன்றுடன் தனது 46வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் அவரது திரைப் பயணம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தொகுப்பை தற்பொழுது பார்க்கலாம்.பைக்குகள் மீது இளைஞர்களுக்கு உள்ள காதலை மையமாக வைத்து பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராக பணியாற்றி கடும் போராட்டங்களுக்கு பிறகு இயக்குனராக உருவெடுத்த வெற்றிமாறன், முதல் திரைப்படத்திலேயே ஒரு வர்த்தக வெற்றி இயக்குனராகவும், சிறந்த படைப்பாளியாகவும் தன்னை நிரூபித்தார்.
இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் படத்தில் சேவல் சண்டையை மையமாக வைத்து தனது திரைக்கதையில் அதீத திறனை வெளிப்படுத்திய வெற்றிமாறன், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என இரண்டு தேசிய விருதுகளை தனது இரண்டாவது படத்திலேயே சொந்தமாக்கினார். மேலும் இந்தத் திரைப்படம் அந்த ஆண்டில் அதிக பட்சமாக ஆறு தேசிய விருதுகளை வென்று ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இதை அடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்படும் விசாரணை கைதிகள் அனுபவிக்கும் தண்டனைகளை மையமாக வைத்து விசாரணை திரைப்படத்தை இயக்கினார் வெற்றிமாறன். சாமான்ய மனிதர்களுக்கு எதிரான காவலர்களின் அத்துமீறல்களை பிரதிபலித்த இந்த திரைப்படம் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது. இந்த திரைப்படத்திற்கும் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது வந்துசேர, வடசென்னை அசுரன் ஆகிய அடுத்தடுத்த இரு வெற்றித் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் ஆச்சரியமாக உயர்ந்திருக்கிறார்
வெற்றிமாறன்.இயக்குனராக மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியராகவும் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து சினிமாவில் இயங்கிவரும் வெற்றிமாறன் தயாரிப்பாளராக காக்காமுட்டை திரைப்படத்திற்கும் தேசிய விருது வென்று அசத்தியுள்ளார். பெரும்பாலும் விருது வெல்லும் திரைப்படங்கள் வணிகரீதியில் வெற்றி பெறாது என்ற எண்ணத்தை மாற்றி மக்கள் ரசிக்கும் ஜனரஞ்சகமான திரைப்படங்களை சிறந்த படைப்புகளாக உருவாக்க முடியும் என தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயம் எழுத தன் படைப்புகளால் போராடிவரும் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது நம் மக்களின் சப்தம்
கருத்துகள் இல்லை