• சற்று முன்

    வில்வித்தையில் 12 சுற்று முடிவில் 663 புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்த இந்திய வீராங்கனை தீபிகா குமார்


    டோக்கியோ: ஒலிம்பிக் 2020ல் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்றுகளில் இந்தியாவின் தீபிகா குமாரி 9வது இடம் பிடித்தார்.

    ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் 2020 போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. தொடக்க நாளான இன்று இந்தியா சார்பாக தீபிகா குமார், அட்டானு தாஸ் ஆகிய வில்வித்தை வீரர், வீராங்கனைகள் முதல் கட்ட போட்டிகளில் ஆடுகிறார்கள்.

    வில்வித்தை போட்டியின் பெண்களுக்கான ரேங்கிங் சுற்றுகள் இன்று நடைபெற்றன. மொத்தம் 12 சுற்றுகள் தொடரில் நடைபெற்றது. இதில் ஒரு சுற்றுக்கு தலா 6 முறை வில்களை ஏவ வேண்டும்.

    தகுதி பெறுவது எப்படி 

    வில்வித்தை ரேங்கிங் சுற்று குறித்து சுருக்கமாக இங்கு பார்த்து விடலாம். ரேங்கிங் சுற்று என்பது வில்வித்தை போட்டியில் பங்கு பெறும் 128 பேருக்கு (64 வீரர்கள், 64 வீராங்கனைகள்) இடையில் நடக்கும் சுற்றாகும். 64 வீரர்களும் ரேங்கிங் போட்டியில் 12 சுற்றுகளில் மொத்தம் 72 முறை வில்களை ஏவுவார்கள். ஒரு சுற்றில் வில்களை ஏவ மொத்தம் 6 நிமிடங்கள் வழங்கப்படும்.

    ரேங்க் 

    இதில் வரும் புள்ளிகள் அடிப்படையில் 64 பேருக்கும் ரேங்க் கொடுக்கப்படும். இந்த ரேங்கிங் சுற்றில் முதலில் வரும் நபர் 64வது நபருடன் குழு போட்டியில் (நேருக்கு நேர் மோதல்) மோத வேண்டும். அதேபோல் இரண்டாவது வரும் நபர் 63வது ரேங்க் வரும் நபருடன் மோத வேண்டும். ஒலிம்பிக் பெண்கள் பிரிவு வில்வித்தை ரேங்கிங் போட்டியில் இன்று உலகின் நம்பர் 1 வீராங்கனையான இந்தியாவின் தீபிகா குமாரி பங்கேற்கும் போட்டி நடைபெற்றது.

    சறுக்கல் 

    7வது இடம், 8வது இடம், 6வது இடம் என்று அடுத்தடுத்த சுற்றுகளில் மாறி மாறி ஏறி இறங்கி வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் 60 புள்ளிகளுக்கு 54, 55, 53 என்று சராசரியாக எடுத்து வந்தார் தீபிகா. அதிகமாக 10வது சுற்றில் 58 புள்ளிகளை தீபிகா குமாரி பெற்றார். மொத்தமாக 12 சுற்று முடிவில் 663 புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்தார்.

    யார் 

    இந்த ரேங்கிங் சுற்றில் 616 புள்ளிகள் பெற்ற பூட்டானின் கர்மா என்ற வீராங்கனையுடன் குழு சுற்றில் தீபிகா குமாரி மோதுவார். இந்த ரேங்கிங் சுற்றில் முதல் இடத்தை கொரியாவின் ஆன் சான் பிடித்தார். இவர் 12 சுற்றுகள் முடிவில் 680 புள்ளிகள் பெற்றார். இது புதிய உலக சாதனையாகும்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad