Header Ads

  • சற்று முன்

    காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது

     59 வயதான விவேக், நேற்று வெள்ளிக்கிழமை அவரது சென்னை வீட்டில் கடுமையான மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார். சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

    நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானதையடுத்து அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.இன்று பிற்பகல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் தகன மயானத்துக்கு விவேக்கின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 

    இதில் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏராளமான அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க உடலை சுமந்து செல்லும் வாகனத்தை சாலையின் இரு புறத்திலும் நின்றவாறு பார்த்தனர்.முன்னதாக, தமிழக அரசு உத்தரவின்படி மாநில காவல்துறை சார்பாக சென்னை ஆயுதப்படையினர் மயானத்தில் அணிவகுத்து, வானை நோக்கி தங்களின் துப்பாக்கியால் மூன்று ரவுண்டு சுட்டு நடிகர் விவேக்கின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதும் சம்பிரதாய சடங்குகளை நிறைவேற்ற அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் 2015இல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தற்போது அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தேஜஸ்வினி, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரைத்துறையினர் முன்னிலையில் இறந்த தனது தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை செய்து உடலுக்கு தீ மூட்டினார்.



    இதையடுத்து அவரது உடல் மாலை 6 மணியளவில் மின் தகன மேடைக்குள் எரியூட்ட அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திரைத்துரையினரும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad