கூடுவாஞ்சேரி பகுதிகளில் நாளுக்கு நாள் தொடரும் திருட்டு சம்பவங்கள் கண்டு கொள்ளாத காவல்துறை அதிகாரிகள்**
கூடுவாஞ்சேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி பொதுமக்கள் தங்களது தூக்கத்தை தொலைத்து, நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கூடுவாஞ்சேரி போலீசாரோ, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தங்களுக்கென்ன என்று கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் அபார வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக கூடுவாஞ்சேரி உள்ளது. தற்போது ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிதாக மிகப் பெரிய அளவில் பேருந்து நிலையம் வேறு வர உள்ளதால், கூடுவாஞ்சேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் சென்னை மாநகர எல்லைக்குள் விற்பனையாகும் நிலத்தின் மதிப்பை விட, தற்போது கூடுவாஞ்சேரி பகுதிகளில் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வருகிறது. ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கூடுவாஞ்சேரி பகுதிகளில் நிலத்தில் முதலீடு செய்யவும், புதிதாக வீடு கட்டி குடியேறவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது கூடுவாஞ்சேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் சக்கைபோடு போடுகிறது. இதனால் அரசுக்கும் அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு வளர்ந்து வரும் கூடுவாஞ்சேரி பகுதிகளில் சமீப காலமாக வீடு மற்றும் கடைகளை உடைத்து திருடும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கூட கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம், திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற விஏஓ செந்தாமரை என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 110 சவரன் தங்க நகைகள், ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் இரண்டு கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு காயராம்பேடு, மகாநதி நகர் பகுதியை சேர்ந்த குப்பன் என்பவரது கடையை உடைத்து, லேப்டாப், தங்க நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை தற்போது வரை கூடுவாஞ்சேரி போலீசார் கண்டுபிடிக்கவில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் எவ்வித முனைப்பும் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனாலேயே கூடுவாஞ்சேரி பகுதிகளில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுவாக, குற்றம் நடைபெறும் பகுதிகளில், குற்றங்களை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் அதிக குற்றங்கள் நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து குற்றவாளிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் அசோகன் செய்யாமல், நிலம் தொடர்பான சிவில் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட, அதனை மதிக்காமல், வாடகை வீட்டில் குடியிருப்போரை காலி செய்வது மற்றும் நிலம் தொடர்பான பிரச்சனை போன்ற சிவில் விவகாரங்களில் தலையிட்டு, கட்டப் பஞ்சாயத்து செய்து, காசு பார்த்து வருகிறார். அதற்கே அவருக்கு நேரம் போதுமானதாக இருப்பதால், திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, மீண்டும் இது போன்ற ஒரு தவறு நடக்காமல் தடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சீர் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிவில் விவகாரங்களில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்து காசு பார்ப்பது போன்று, திருடர்களிடம் இருந்தும் அடிக்கும் கொள்ளையில் பங்கு வாங்குகிறாறோ, அதனால் தான் திருட்டை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையோ என்று எண்ணத் தோன்றுவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே இந்த விவகாரத்தில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக தலையிட்டு, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை