கொரோனா சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
மாணவர்கள் மனநிலை மற்றும் கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன
வரும் 21ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து பாடம் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகளை எப்போது திறப்பது? என்பது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குநர்கள் கண்ணப்பன், உஷா ராணி, பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனையில், பள்ளிகளைத் திறக்கும் தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்திருப்பதாகவும், தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வரின் ஒப்புதல் கிடைத்த உடன், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர்கள், மாணவர்கள் மனநிலை மற்றும் கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்கள் புரியாமல் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்கள் மனநிலை அறிந்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
இதனிடையே அதிக கட்டணம் வசூலிப்பது பற்றிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் செங்கோட்டையன், அதிக கட்டணம் வசூலித்ததாக தற்போது வரை 14 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை