பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... இளைஞர் மீது குண்டாஸ்.பாய்ந்தது
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 26 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவிக்கு அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவுக்கார இளைஞர் முருகன் (26) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் முருகனை கைது செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ, மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் குற்றவாளி முருகனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, புதுக்கோட்டை எஸ்.பி பாலாஜி சரவணன் அளித்த பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை