கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் நாராயண மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்குழந்தை. இவருடைய மகன் செல்வம் (வயது35). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் அருள் (3) என்ற ஆண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் 21-ந்தேதி செல்வம், அவரது குழந்தை, நண்பர் தேவன் (30) ஆகிய 3 பேரும் பைக்கில் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் சென்றுக்கொண்டிருந்தனர். பைக்கை தேவன் ஓட்டினார்.
அப்போது, போளூரில் இருந்து வேலூர் நோக்கி பின்புறம் வந்துக்கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இந்த விபத்தில், குழந்தை உள்பட பைக்கில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் 3பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக செல்வம் மட்டும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் நள்ளிரவு இறந்தார்.
குழந்தை அருள், நண்பர் தேவன் ஆகிய 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
