Header Ads

  • சற்று முன்

    இதற்குத்தான் ஆசைப்படுகிறதா? மத்திய மோடி அரசு-!

    சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 யாருக்காக? - த.லெனின்

    இயற்கையை நாம் தாக்கினால் அது நம்மை பழிவாங்கும் என்றார் பிரடெரிக் ஏங்கெல்ஸ். இயற்கை வளத்தை பாதுகாப்பது என்பது பாதுகாப்பான உலகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த வழியாகும். எனவேதான், இயற்கை பாதுகாப்பை இன்று உலகம் விவாதித்து வருகிறது.
    தனியார்மய, தாராளமய, உலகமயமாக்க நடவடிக்கையால் இயற்கையை கொடூரமாக ஆழிப்பதும் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுசூழலுக்கு எதிரான நச்சுக் கழிவுகளை வெளியிடும் நாசகார தொழிற்சாலைகளை அமைப்பதும் மிகப்பெரும் அளவிற்கு வளர்த்தெடுக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு ஏற்பட்ட சுற்று சூழல் விழிப்பால் இதுபோன்ற தொழில் கூடங்கள் அங்கு நிர்மாணிக்க முடியவில்லை.

     எனவே, இந்தியா போன்ற வளர்முக நாடுகளின் தலையில் இவை கட்டப்பட்டன. அப்படி வந்ததுதான் ஸ்டெர்லைட் கம்பெனி கூட. பொதுவாக இந்தியாவில் சுற்றுசூழல் எப்போதுமே சிறப்பாக பாதுகாக்கப்பட்டதில்லை. 1994ம் ஆண்டு சூழலியல் குறித்து ஒரு சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. அது 2006ல் சூழலியல் தாக்க மதிப்பீடு என்பதாக உருவாக்கப்பட்டு இப்பபோது நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும் மக்களிடம் கருத்து கேட்பதை உத்தரவாதப்படுத்துகிறது. ஆனால், 2020 மார்ச் மாதம் பா.ஜ.க. அரசு வெளியிட்ட சூழலியல் தாக்க மதிப்பீடு அனைத்து நடைமுறைகளையும் மாற்றி அமைத்து பெரும் நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் எந்த சிரமமும் இன்றி தொழில் துவங்க மக்களிடம் எந்த கருத்தறிதலும் தேவையில்லை என்று மாற்றி கார்ப்பரேட்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது பா.ஜ.க.அரசு! கொரோன பரவல் உலகம் முழுவதும் படு பயங்கரமாக அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இந்தியாவும் மிகக் கொடூரமாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் சிரமத்தையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டிய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை. மாறாக கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளி அள்ளி கொடுப்பது மட்டும் தொடர்கிறது. தற்போதைய வரைவு அறிக்கையின் படி இரண்டு விதமான சுற்றுச் சூழல் அனுமதிகள் வழங்கப்படும். ஒன்று வல்லுனர் குழு அமைக்கப்பட்டு அத்திட்டம் குறித்து ஆய்வுகள் நடத்தி பின்னர் அனுமதி வழங்குவது மற்றொன்று எந்தவித வல்லுனர் குழுவின் ஆய்வும் இன்றி அனுமதி கொடுத்துவிடுவது.


    அரசியல் சாசன பிரிவு 21 ன் படி அரசின் கொள்கை முடிவெடுத்தலில் மக்களின் பங்கேற்பை உறுதி செய்கிறது. ஆனால், இந்த வரைவு அறிக்கையை எதிர்ப்பதில் டுவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தாலும் சாதாரண மக்கள் கருத்து சொல்கிற வகையில் அவர்களது தாய் மொழியில் இவ்வறிக்கை வெளியிடப்படவில்லை. மாறாக இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே உள்ளது. இதுவே அவர்களின் நோக்கத்தை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
     1986ல் நடைமுறைக்கு வந்த சுற்றுச்சூழல் சட்டம் 1994ம் ஆண்டு சுற்றுச் சூழல்தாக்க மதிப்பீட்டு அறிக்கையை சட்ட ரீதியாக கட்டாயமாக்கியது. ஆனால், இப்போதைய வரைவு அறிக்கை மத்திய அரசுக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்களை வழங்கும் வகையில் உள்ளது. அதன்படி சுற்றுசூழல் தாக்க அறிக்கையை முன்வைக்காமலும் மக்களிடம் கருத்துக் கேட்காமலும் நடைமுறை செயல்பாட்டில் உள்ள புதிய திட்டங்கள், பழைய திட்டங்களின் விரிவாக்கம், கட்டுமானப் பணிகள் இவற்றை எவ்விதத் தடையும் இன்றி தொடரலாம். அரசுக்கு தண்டத்தொகை செலுத்தினால் போதும். அனுமதி கிடைத்துவிடும் என்று குறிப்பிடுகிறது.


    அத்துடன், 70 மீட்டர் வரை சாலைகளை அகலப்படுத்துதல், நீராதார கட்டமைப்புகள், பெரும் கட்டுமானத் திட்டங்கள் போன்ற 14 வகையான பணிகளுக்கு, ஏன் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பவை என்று கருதப்படும் திட்டங்களுக்கும் கூட இனி சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை முன்வைக்க தேவையில்லை. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியும் தேவையில்லை.



     இதன் இன்னொரு திருத்தமாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில், கடலோர தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்கள், விரிவாக்கப் பணிகளுக்கும் இனி சுற்றுச் சூழல் அனுமதி தேவையில்லை என்று நிராகரித்திருக்கிறது இவ்வரைவு.

    ஏற்கனவே நமது கடலோரங்களில் 500 மீட்டர்வரை எந்த கட்டுமானங்களும் இருக்கக் கூடாது என்பது விதி. இனி இது மீறப்படலாம். கடல் வளங்களைக் கொள்ளையடிக்க எந்த நிலைக்கும் செல்லலாம். நம்மால் உருவாக்க முடியாத இயற்கையை நாம் அழிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் அதை பாதுகாப்பதற்கும் மட்டுமான உரிமை மட்டுமே நமக்கு உள்ளது. மேலை நாடுகளில் தான் தன் தோட்டத்தில் சொந்தமாக வளர்த்த ஒரு மரத்தைக் கூட வெட்ட முடியாது. ஆனால், இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில்  2500 சதுர கிலோ மீட்டர் காடுகளை அழிக்கப்பட்டிருக்கின்றன. நதிகள் அந்நிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கின்றன. எதெற்கெடுத்தாலும் பாரத மாதா, பாரத மாதா என பம்மாத்து காட்டும் பா.ஜ.க. பரிவாரங்கள் பாரத மாதாவின் அங்கமாக இருக்கிற அதன் கூந்தல் போன்ற காடுகளை மொட்டையடித்துள்ளனர்.

     அதன் உடல் அங்கங்களான  மலைகளை, சிகரங்களை, நீர் பரப்புகளை நிர்மூலப்படுத்தியிருக்கின்றனர். ஆக பாரத மாதாவை குற்றுயுரும் குலைவுயிருமாய் மாற்றி விட்ட தேச பக்தர்கள் இவர்கள். அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதில் கடந்த 2018ல் 100வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 63வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கான காரணம் பா.ஜ.க. அரசு சமீபத்தில் கொண்டு வந்த சரக்கு சேவை வரி, தொழிலாளர் சட்டங்களில் தளர்வு போன்றவைதான் காரணம் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது.
     சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 அமல்படுத்தப்பட்டால் தமிழகம் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கும்.இன்னும் இயற்்கையை அழிக்கும் ஆபத்தான தொழிிற்சாலைகள் கம்பளம் விிரித்து வரவேற்கப்படும் குறிப்பாக காவிரி தீரத்திற்கு உயிராதாரமான காவிரி நீர் கானல் நீராக மாறிவிடும். எந்த கருத்துக் கேட்பும் இன்றி கர்நாடகா மேகதாட்டில் அணை கட்டலாம். தமிழ்நாடே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. 

    தேவைப்பாட்டால் கர்நாடகா இன்னும் பல அணைகளைக் கட்டி கடைசி சொட்டு நீரையும் தனக்கே பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டின் நீர் உரிமை முற்றாக பறிக்கப்படும்.  காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாமாக அறிவித்துள்ள தமிழக அரசின் அரசாணை இனி ஏட்டில் மட்டு«ம் இருக்கும். அதை நடைமுறைப்படுத்தும் உரிமையைக்கூட இவ்வரைவு தட்டிப்பறித்துவிடும் அபாயம் எழுந்துள்ளது.   அதுபோலவே முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு நினைத்தால் மாற்றி புதிய அணையைக் கட்டிக் கொள்ளலாம். ஏற்கனவே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டிய காரணத்தால் பாலாறு, பாழாறாகிவிட்டது. மழை பெய்வதன் மூலம் வரும் தண்ணீரைக் கூட அவர்கள் தடுத்துக் கொள்ளலாம்.


    நமது இயற்கை வள பாதுகாப்பு மண்டலமாக இருக்கிற மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வுகள் மேற்கொள்வதற்கென்று ஆய்வகம் அமைத்து அம்மலை வளத்தை குலைக்கலாம். சென்னை & சேலம் எட்டுவழிச்சாலை மக்கள் எதிர்ப்பையும் புறக்கணித்து எந்த கருத்துக் கேட்பும் நடத்தாது சர்வாதிகார திமிரோடு அடம் பிடித்து தீவிரமாக அமல்படுத்தலாம். காடுகளில் வாழும் பழங்குடி மக்கள்கூட இனி விரட்டப்படாலம்.

    இப்படி நமது சுற்றுச் சூழலை, விவசாயத்தை, இயற்கை வளத்தை, கனிம வளத்தை சூறையாடும் கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதற்கா மத்திய அரசு. ஏற்கனவே காற்று மாசால் ஆண்டுக்கு நான்கு லட்சத்திலிருந்து எட்டு லட்சம் பேர் மரணமடைவதாகச் சொல்லப்படுகிறது. தலைநகர் டில்லியே காற்று மாசால் தனது சுவாச இயக்கத்தை நிறுத்திக் கொண்ட காலங்களை நாம் சந்தித்திருக்கிறோம். சென்னையில்கூட காற்று மாசால் மிகப்பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறோம். மக்களின் உடல் நலத்தை பாதிக்கக் கூடிய இத்தாக்க அறிக்கை தேவைதானா? தேசிய பசுமை தீீர்ப்பாயம் இனி தேவையற்ற ஒன்றாக மாறிவிடும்!இவ்வளவு பேரையும் பாதிக்கும் இந்நடவடிக்கையை யாருக்காக இந்த பா.ஜ.க. அரசு அமல்படுத்தத் துடிக்கிறது?

    ஸ்டெர்லைட்டுகளும், ஜின்தால்களும், அம்பானிகளும், அதானிகளும் மிகப் பெரும் வாய்பைப் பெறுவர். மக்கள் அனாதைகளாக விடப்படுவர். இதற்குத்தான் ஆசைப்படுகிறதா? மத்திய மோடி அரசு-!

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad