ஜோலார்பேட்டை அருகே, காதலனின் வீட்டை அடித்து நொறுக்கிய இளம்பெண்ணின் பெற்றோரை போலீஸார் கைதுசெய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள பெரிய மோட்டூர் பூனைக்குட்டி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர், கருணாகரன். இவரது மகன் ஹரீஷ்குமார் (25), கார் டிங்கரிங் வேலை செய்கிறார். ஹரீஷ்குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் கடை சேல்ஸ்மேன் ஒருவரின் 21 வயது மகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்துவந்துள்ளனர்
இவர்களின் காதல் விவகாரம், சமீபத்தில் இளம்பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவர, ஆத்திரமடைந்த அவர்கள் ஹரீஷ்குமாரை அழைத்து கண்டித்துள்ளனர். கடந்த 29-ம் தேதி, பெற்றோருக்குத் தெரியாமல் காதலன் ஹரீஸ்குமாருடன் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார், அந்த இளம்பெண். ஏற்கெனவே ஆத்திரத்தில் இருந்த இளம்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் சிலருடன் ஹரீஷ்குமாரின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து பொருள்களை அடித்து நொறுக்கியதுடன், அவரின் பெற்றோரையும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர்கள், சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் குறித்து, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் காதலனின் தாய் தேவகி புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவுசெய்து, இளம்பெண்ணின் பெற்றோரைக் கைதுசெய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அவர்களது உறவினர்கள் நான்கு பேரையும் போலீஸார் தேடிவருகிறார்கள்.
எமது செய்தியாளர் : ஆர். ஜே . சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை