'திமுக பிரமுகர் மீது அவரது தாய் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் மனு!!!
சொத்துக்களை பெற்றுக்கொண்ட எனது மகன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக பிரமுகர் மீது அவரது தாய் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
ஆம்பூர் மந்தாரை வீதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவர், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருளிடம் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது எனது பெயர் சகுந்தலா (வயது 75). நான், ஆம்பூரில் மந்தாரை வீதி சான்றோர் குப்பம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சுப்பிரமணி. 40 ஆண்டுகளாக மளிகைக்கடை நடத்தி, அவரின் உழைப்பால் பல சொத்துக்கள், தங்க நகைகள் ஆகியவற்றை வாங்கினார். எனது தந்தை வழியில் எனக்கு பாகமாகக் கிடைத்த பணத்தைக் கொண்டு நாங்கள் வாங்கிய சொத்துக்களை எனது இளைய மகன் எஸ்.கணேசன் (முன்னாள் தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்) மீது நம்பிக்கையாலும், பாசத்தாலும் பத்திரப்பதிவு செய்து வைத்தேன்.
எனது கணவர் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். எனது சொத்துக்களை பெற்றுக்கொண்ட எனது இளைய மகன், என்னை அடித்து துன்புறுத்தினார். என்னை பார்ப்பதும் பேசுவதும் கிடையாது. எனக்கு உணவு அளிப்பதும் கிடையாது. நாங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய சொத்துக்களை கணேசன் தன்னுடைய இஷ்டத்துக்கு விற்பனை செய்கிறார். எனவே அவர் மீதுள்ள சொத்துக்களை ரத்து செய்து, திரும்ப எனக்கு பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னை கொடுமைப்படுத்தியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
எமது செய்தியாளர் : சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை