கரோனா ஊரடங்கு உத்தரவினால் கோவில்பட்டியில் ஆட்டுக்கறி இறைச்சி விலை உயர்வு - தாசில்தார் மற்றும் சுகாதாரத்துறையினர் நேரில் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 200க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி கடைகள் மீன் கடைகள் கோழி கடைகள் மாட்டு இறைச்சி கடைகள் உள்ளன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைத்துக் கொள்வதற்காக இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே அதிகரித்து இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு கடந்த 10 தினங்களுக்கு மேலாக அமலில் உள்ள நிலையில் தென் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற எட்டையபுரம் ஆட்டுச்சந்தை இயங்கவில்லை. மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை இயங்கவில்லை. அருகாமை நகரங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை சந்தைகளுக்கு கொண்டு வரமுடியவில்லை. இதனால் ஆடுகளின் வரத்து குறைந்து விட்டது.
இதன் எதிரொலியாக இறைச்சி கடைகளில் ஆட்டுக்கறி இறைச்சியின் விலை ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது ஊரடங்கு உத்தரவு அமல் படுத்துவதற்கு முன்பாக ஒரு கிலோ ஆட்டு இறைச்சி விலை 600 ரூபாயாக இருந்தது. ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட பிறகு இன்றைக்கு ஒரு கிலோ ஆட்டு இறைச்சியின் விலை 900 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆட்டு இறைச்சியின் விலை 900 ரூபாய்க்கு விற்பனையான போதிலும் கோவில்பட்டி மக்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்டு இறைச்சிகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.இந்த திடீர் விலை உயர்வினை சோதனை செய்ய அப்பகுதிக்கு தாசில்தார் மணிகண்டன் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் இளங்கோ,சுரேஷ் கடைகளை ஆய்வு செய்து விலை அதிகம் வைத்து விற்கும் கடைகளுக்கு எச்சரிக்கை செய்தனர். அடுத்தமுறை இவ்வாறு விலை அதிகம் வைத்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை