• சற்று முன்

    கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் 649ஆக உயர்வு - தமிழகத்தின் நிலவரம் என்ன?


    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 பேர் முற்றிலும் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து நான்கு நாட்களாக இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 70-80 என்ற அளவில் இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 43 பேருக்கு மட்டுமே கொரோனா பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இன்று மாலை இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபடி, நேற்று (புதன்கிழமை) முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முடக்க நிலை அமலுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் ராணுவ, கப்பற்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சௌதி அரேபியாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணொருவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவரது மனைவி, மகள் மற்றும் மேலும் நான்கு பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார் 
    மேலும், கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள அந்த மருத்துவரிடம் தொடர்பில் இருந்த 800க்கும் மேற்பட்டோர் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

    ஊரடங்கு விதிகளையும், சமூக விலக்கத்தை அனைவரும் கடைபிடிப்பது அவசியம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்றும் ஊரடங்கை கடைபிடிப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமை என்றும் இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் இன்று மாலை நடந்த செய்தியாளர்ட் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad