Header Ads

  • சற்று முன்

    உலக நாடுகளிலே கோரனோ தொற்றுவிற்கு பாதிக்கப்பட்ட நாடுகளிலே அமெரிக்க முதன்மை நாடாக விளங்குகிறது


    85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகளை பொறுத்தவரை, அமெரிக்காவை (1200) விட இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365) மற்றும் சீனாவில் (3169) ஆகியவை அதிக இழப்புகளை சந்தித்துள்ளன.

    உலகளவில் பார்க்கும்போது, 531,860 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,057 என்னும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்கா “மிகவும் வேகமாக” மீண்டெழும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடு என்னும் நிலையை அமெரிக்கா பெற்றுள்ளது.

    இதன் மூலம், கடந்த டிசம்பர் மாதம், முதன் முதலில் கண்டறியப்பட்டு இந்த நோய்த்தொற்றின் மையமாக விளங்கிய சீனா, கடும் உயிரிழப்புகளை சந்தித்து வரும் இத்தாலி ஆகியவற்றுக்கு அடுத்ததாக கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய மையமாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தினந்தோறும் வெள்ளை மாளிகையில் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப், “நாம் செய்து வரும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டு மக்கள் பணிகளுக்கு திரும்ப வேண்டும், நாடும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இது மிகவும் விரைவில் நடக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

    சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து சந்தேகம் தெரிவித்த டிரம்ப், “சீனாவில் நிலவும் உண்மை நிலை குறித்து உங்களுக்கு தெரியாது” என்று கூறினார்.
    கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வரவுள்ள கிறித்துவர்களின் முக்கிய பண்டிகையான உயிர்ப்பு ஞாயிறுக்கு (Eater Sunday) முன்னதாக இந்த முடக்க நிலையை திரும்ப பெறுவதற்கு டிரம்ப் இலக்கு நிர்ணயித்துள்ளது அந்த நாட்டில் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

    அமெரிக்க மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதை போன்ற உத்வேகத்தை அளிப்பதற்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டதாக கருதப்பட்டாலும், நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் 3.3 மில்லியன் மக்கள் இந்த நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனதாக அரசிடம் முறையிட்டுள்ளனர்.

    கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக அமெரிக்கா முழுவதும் பல்லாயிரக்கணக்கான கடைகள், தொழிற்சாலைகள், சேவை மற்றும் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. விமானம், ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு கார் உள்ளிட்டவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது பலத்த பொருளாதார சிக்கலை உண்டாக்கியுள்ளது.

    இதனால் மக்கள் அதிவேகமாக வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். அதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார பெருமந்தத்தின் காரணமாக அமெரிக்காவில் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது ஐந்து மடங்கு அதிகம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad