கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்
பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் உள்ள பாரபட்சத்தை கண்டித்து நேற்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் வந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான மக்காச்சோள பயிருக்கான காப்பீட்டு தொகை வழங்குவதில் முடுக்கலான்குளம் கிராம விவசாயிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்து கோஷங்கள் முழங்கினர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட உதவி செயலாளர் ஜி.சேதுராமலிங்கம், நகர செயலாளர் ஏ.சரோஜா, வட்டச்செயலாளர் ஜி.பாபு, கயத்தாறு ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் வழங்கிய மனுவில், கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டி குறுவட்டத்தில் உள்ள கிராமங்களில் 2018-ம் ஆண்டுக்கு பயிர் செய்யப்பட்ட மக்காச்சோளத்துக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் முடுக்கலான்குளம் கிராம விவசாயிகளுக்கு தலா ஏக்கருக்கு ரூ.5,300 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதே காமநாயக்கன்பட்டி கிராமத்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, முடுக்கலான்குளத்துக்கு வழங்கப்படும் தொகை மற்ற கிராமங்களை விட மிக குறைவாகும். எனவே, முடுக்கலான்குளம் விவசாயிகளுக்கும், காமநாயக்கன்பட்டி குறுவட்ட விவசாயிகளுக்கு வழங்குவது போல் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை