திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் மகா தேரோட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் ஏழாம் நாள் திருவிழா மகா தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.25 மணிக்கு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர்,
பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், தனித்தனி தேரில் வீதி உலா வந்தனர். பிற்பகல் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தேர் 100 டன் எடை கொண்ட, 118 அடி உயரமுள்ள மகா ரதத்தினை, மூன்று டன் எடை கொண்ட ராட்சத இரும்பு சங்கிலி வடத்தினை கொண்டு பக்தர்கள் உணர்ச்சிப்பெருக்கால் அண்ணாமலைக்கு அரோகரா என்று விண்ணை முட்ட கோஷம் எழுப்பி மக்கள் கடலில் அண்ணாமலையார் மகா ரதம் மிதந்து வந்தது. இரவு பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச் செல்லும் பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை மாடவீதிகளில் உலா வந்தது. இவ்விழாவில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, கோயில் இணை ஆணையர் இரா ஞானசேகர், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை