• சற்று முன்

    கோவில்பட்டியில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தாக்கியதாக கூறி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற வியாபாரி பரபரப்பு


    கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சியை சேர்ந்த இசக்கி மகன் ராயப்பன்(35). இவர் தற்போது குடும்பத்துடன் கோவில்பட்டி வசந்தம் நகர் 2-வது தெருவில் வசித்து வருகிறார். இவர் ரெயில் நிலையத்தில் கடலைமிட்டாய் உள்ளிட்ட தின்பண்ட வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், ராயப்பன், சாத்தூரை சேர்ந்த ஜெயபாண்டி(58), முத்துராமலிங்கம்(56), கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த வெற்றிவேல்(56) ஆகியோர் நேற்று  வியாபாரம் செய்த போது ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பிடித்து சென்று விசாரணை நடத்திய பின்பு இன்று காலையில் வெளியே அனுப்பியுள்ளனர்.இதில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸார் தன்னை தாக்கியதாக கூறி ரெயில் நிலைய வளாகத்துக்கு வெளியே ராயப்பன் விஷமருந்தி மயங்கினார். இதை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் சக தொழிலாளிகளை அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் ரெயில் நிலையத்தில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் மருத்துவமனை அவசர பிரிவு முன் அமர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலையங்களில் தின்பண்டங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோஷங்கள் முழங்கினர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து ரெயில் நிலையத்தில் வியாபாரம் செய்யும் தொழிலாளிகள் கூறுகையில், “நாங்கள் கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, விருதுநகர் வரை ரெயில் நிலையங்களில் டீ, காபி, கடலைமிட்டாய் ஆகியவற்றை வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த 4 மாதங்களாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸாரால் நாங்கள் மனஉளைச்சலுடன் உள்ளோம். எங்களை வியாபாரம் செய்யக்கூடாது என தடை செய்கின்றனர். இதில் மதுரை கோட்டத்தில் முக்கியமாக இங்கு மட்டும் இந்த பிரச்சினை உள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு 4 வியாபாரிகளை பிடித்து சென்ற ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இரவு முழுவதும் சிறையில் வைத்திருந்துவிட்டு, இன்று காலை 11 மணிக்கு தான் வெளியே விட்டனர். எங்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இதில் வெளியே வரும் போது ராயப்பன் விஷமருந்தியிருந்தார். இதனால் உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை.

    எங்களுக்கு ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் வியாபாரம் செய்ய நிரந்தர உரிமம் வழங்க வேண்டும். விருதுநகருக்கு வடக்கேயும், திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களிலும் எங்களை போன்ற வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, விருதுநகர் ஆகிய இடங்களில் தான் எங்களை தடுக்கின்றனர். நாங்களுக்கு பணம் கொடுக்கத்தான் செய்தோம். இப்போது அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்க இயலவில்லை. இதனால் எங்களை கொடுமைப்படுத்துகின்றனர்” என்றனர். மேலும் பிடித்து சென்றவர்களில் ஒருவரை சங்கிலியால் கட்டி வைத்து இருந்ததாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸாரிடம் கேட்டபோது, கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்வே நிர்வாகத்தின் உரிமமின்றி வியாபாரத்தில் ஈடுபட்ட 4 பேரை நேற்று பிடித்தது உண்மை தான். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஒன்றரை மணி நேரம் வரை மட்டுமே ரெயில்வே பாதுகாப்பு படை புறக்காவல் நிலையத்தில் இருந்தனர். அதன் பின்னர் விடுவிக்கப்பட்டனர், யாரையும் தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad