திருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பேரவை பொதுச் செயலாளர் சவுந்தரராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் வீரபத்திரன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் முத்தையன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் கொள்ளையர்கள், சமூக விரோதிகளை உடனே கைது செய்ய வேண்டும். கொள்ளைபோன விற்பனை பணத்தை நிர்வாகமே ஏற்று கொள்ள வேண்டும். மருத்துவ செலவினங்களை முழுமையாக ஏற்று கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். சென்னையில் பெறுவதை போல் விற்பனை பணத்தை நிர்வாகம் நேரடியாக வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை