வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் தவளகிரீஸ்வரர் கோவில் கோபுரம் மர்ம நபர்களால் சிதலம் - போலீஸ் வலை விச்சு
வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் மலை மீது தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வார்கள். மாலையில் கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். மேலும் பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் இக்கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பவுர்ணமியை யொட்டி காலை சாமி கும்பிட பக்தர்கள் சிலர் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவில் வளாகத்தில் செங்கல் துகள்கள் சிதறி கிடந்ததை கண்டு சந்தேகம் அடைந்த அவர்கள் அங்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏணியில் ஏறி பார்த்தனர்.
அப்போது கோவில் கோபுரம் மற்றும் கோபுர உச்சியில் இருந்த மண் கலசம் ஆகியவற்றை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. மேலும் கோபுரத்தை உடைக்க பயன்படுத்தப்பட்ட பெரிய சுத்தியலையும் மர்ம நபர்கள் அங்கேயே விட்டுச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் மலை மீது சென்று கோவிலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் கோவிலை பார்வையிட்டார். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர், பா.ஜ.க.வினர் வந்தவாசி தேரடியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை வந்தவாசி தெற்கு போலீசார் சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் வெண்குன்றம் கிராமமக்கள் வந்தவாசி- காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் வெண்குன்றம் பெட்ரோல் பங்க் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வந்தவாசி தெற்கு போலீசார் அவர்களிடம் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தவளகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் அரிகரன் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகினறனர்.
எமது செய்தியாளர் : மூர்த்தி
கருத்துகள் இல்லை