திருவண்ணாமலை கலசபாக்கத்தில் தொடர் விபத்து இருவர் பலி !
கலசபாக்கம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கலசபாக்கம் அருகே தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30), இவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள ஊதிரம்பூண்டி கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
தேவனாம்பட்டு ஏரிக்கரை வளைவில் எதிரே தேவனாம்பட்டு காலனியைச் சேர்ந்த வசந்த் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த குமார் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் கலசபாக்கத்தை அடுத்த காப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (50), விவசாயி. இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள கூட்ரோடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கத்தில் இருந்து போளூர் நோக்கி வந்த கார் குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்துகள் குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை