Header Ads

  • சற்று முன்

    ஆங்கில வழி கல்வி மோகம் பெற்றோர்களுக்கு உள்ளதாக கலெக்டர் கந்தசாமி கூறுகிறார்

    திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுடன் மழலையர் பள்ளி மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள ஆங்கில வழி மாதிரி பள்ளி வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை கல்வி மாவட்ட அலுவலர் அருட்செல்வம், பள்ளி துணை ஆய்வாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி வகுப்புகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு முதல் ஆங்கில வழியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை பெற்றோர்கள் கஷ்டப்பட்டு தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து வந்துள்ளனர்.தற்போது இந்த நிலை மாற்றப்பட்டு திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு எல்.கே.ஜி. வகுப்பில் மட்டும் 160 மாணவர்கள் சேர்த்து உள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 57 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் இந்த முதல் முயற்சிக்கு ஆதரவளித்த அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கலெக்டர் கந்தசாமி எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளின் கையை பிடித்து தட்டில் வைக்கப்பட்டிருந்த நெல்லில் தமிழ் எழுத்துக்கள் எழுதினார்.மேலும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் மற்றும் மாதிரி பள்ளிக்கான புதிய வகுப்பறைகளை கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி பாடம் நடத்தினார்.

    செய்தியாளர் : திருவண்ணாமலை -  மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad