Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் மழை வேண்டி வருண ராகம் வாசிக்கப்பட்டது.


    திருவண்ணாமலை,பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்தே திருவண்ணாமலையில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் நேற்று ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி கடந்த 8-ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வருண ஜெபம் நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று மழை வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காகவும் திருவண்ணாமலை கிரிவல நாதஸ்வர தவில் இசை சங்கம் சார்பில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை வாசித்தனர். இதில் நாதஸ்வர வித்வான் பிச்சாண்டி தலைமையிலான நாதஸ்வர கலைஞர்கள் குளத்தில் கழுத்து வரை தண்ணீரில் இறங்கி நின்றபடி அமிர்தவர்ஷிணி, மேக ராக குறிஞ்சி ஆகிய வருண ராகங்களை வாசித்தனர். மேலும் கரை படிக்கட்டில் அமர்ந்து தவில் வாசிக்கப்பட்டது. இதுகுறித்து நாதஸ்வர வித்வான் பிச்சாண்டி கூறுகையில், ‘திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகரித்து கொண்டு செல்கிறது. வெயிலின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும் உலக மக்கள் நன்மைக்காக வருண பகவானை நினைத்து வருண ராகங்கள் இசைக்கப்பட்டன’ என்றார்.

    மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்ம தீர்த்த கரையில் பைரவர் சன்னதி உள்ளது. அங்கு நேற்று வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மேலும் பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவரை தரிசனம் செய்தனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad