பாதுகாப்பு நலன் கருதி கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே திறந்து விடப்படுகிறது
ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதில், கர்நாடகா மாநில ரசாயண தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலந்திருப்பதால், தண்ணீர் கருமை நிறத்திற்கு மாறியிருப்பதுடன், நுரைகளுடன் வெளியேறி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது கெலவரப்பள்ளி அணை. கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்றின் நீரே, கெலவரப்பள்ளி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாகும். தற்போது, நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், சில நாட்களாக ஓசூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையாலும் கெலவரப்பள்ளி அணைக்கு மூன்றாவது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் முழுக்கொள்ளளவான 44 புள்ளி 28 அடியில், தற்போது, நீர்மட்டம் 41 புள்ளி 98 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 560 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், தற்போது 720 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக, அணைக்கு வரும் 720 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் நீர் பேரண்டப்பள்ளி, கோபச்சந்திரம், பாத்தக்கோட்டா உள்ளிட்ட பாலங்கள் வழியாக நுரையுடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கெலவரப்பள்ளி அணை நிரம்பும் தருவாயில் இருப்பது விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், மறுபுறத்தில், கர்நாடக பகுதிகளிலிருந்து, அணைக்கு வரும் நீர் முற்றாக மாசடைந்திருப்பதால், அதனை பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. மழைப்பொழிவால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுப்பதை பயன்படுத்திக் கொண்டு, கர்நாடக மாநில பகுதிகளில் உள்ள ரசாயண தொழிற்சாலைகள், தங்கள் ஆலைகளில் உள்ள கழிவுநீரை சுத்திகரிக்காமல், அப்படியே வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.
இதனால், கெலவரப்பள்ளி அணை தண்ணீர், சாக்கடை தண்ணீர் போல், கருமை நிறத்திற்கு மாறியிருக்கிறது. கர்நாடக தொழிற்சாலைகளால் மாசடைந்த நிலையில், கெலவரப்பள்ளி அணையில் தேக்கப்பட்ட தண்ணீர், தற்போது, அதிகப்படியான நீர்வரத்தால், வெளியேற்றப்படும் சூழலில், தண்ணீரில் கலந்திருக்கும் ரசாயணங்களால் அதிகப்படியான நுரைகளுடன் வெளியேறி வருகிறது.
கருத்துகள் இல்லை