முனுகப்பட்டு பகுதிக்கு தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள் திடீர் சாலை மறியல்
முனுகப்பட்டு பகுதிக்கு தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆரணியை அடுத்த முனுகப்பட்டு ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகர் உள்ளது. இந்த பகுதி மக்களுக்காக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் அந்த பகுதியில் இருந்து முனுகப்பட்டு கிராம மக்களுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தங்கள் பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத அளவிற்கு குறைந்துவிட்டதால் முனுகப்பட்டு பகுதிக்கு தண்ணீர் எடுத்து செல்லக்கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை திடீரென ஆரணி - வாழப்பந்தல் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரணமல்லூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி நேரில் வந்து உறுதிமொழி தர வேண்டும் என தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இதனால் ஆரணி-வாழப்பந்தல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை