Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனையில் புறநோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய காவலாளி பணிநீக்கம் செய்யப்போவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள புறவெளிச் சாலையில் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் திருவண்ணாமலை மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் விழுப்புரம், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
    இந்த நிலையில் இங்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும், நோயாளிகள் மற்றும் அவருடன் தங்கி உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் கலெக்டருக்கு புகார்கள் வந்தன. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் பணி புரியும் காவலாளி ஒருவர் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வீடியோ பதிவும் சமூக வலை தளங்களில் பரவியது.
    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அறிந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை வளாகத்தில் 3 பெரிய கிணறுகள் உள்ளன. அந்த கிணறுகளில் தண்ணீர் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அவர் பார்வையிட்டார்.
    பின்னர் ஒவ்வொரு வார்டுகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடமும், பொதுமக்களிடமும் “இங்கு தண்ணீர் வசதி எவ்வாறு உள்ளது, வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா” என்பது குறித்து கேட்டறிந்தார்.
    அதற்கு பொதுமக்கள், தற்போது தண்ணீர் பிரச்சினை இல்லை என்றும் வேறு எந்த குறையும் இல்லை என்றும் கூறினர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் உள்ள ‘டயாலிசிஸ்’ பிரிவையும் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:-
    இங்கு தண்ணீர் பிரச்சினை உள்ளதாகவும், காவலாளி ஒருவர் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றியதாகவும் சமூக வலை தளங்களில் புகார்கள் பரவி வருகிறது. இது குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. தற்போது மருத்துவமனைக்கு தேவைப்படும் தண்ணீர் போதிய அளவுக்கு உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணறுகள் மூலமாகவும், டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீர் வாங்கப்படுகிறது. மேலும் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்தும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
    இங்கு ஒரு நாளைக்கு சுமார் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் குறைந்த அளவிலேயே உள்ளது. கிணற்றை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய காவலாளி பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் மருத்துவமில்லா பணியாளர்கள் யாரும் மருத்துவம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) ஷகீல்அகமது, துணை மருத்துவ கண்காணிப்பாளர் ஸ்ரீதர் மற்றும் பலர் உடனிருந்தனர். திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad