Header Ads

  • சற்று முன்

    ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்து மக்கள் குட்டி நீரை கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


    ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்துக்கு குடிநீர் வழங்குவதற்காக களத்து மேட்டுத்தெருவில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 3 ஆழ்துளை கிணறுகளும் தூர்ந்துபோய் விட்டதோடு மோட்டாரும் பழுதானதால் குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பலர் தொலைதூரம் சென்று கொளுத்தும் வெயிலில் குடிநீர் எடுத்து வருகின்றனர். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடமும் மனு அளித்தனர். ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

    கோடை தொடங்கும் முன்னரே குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விட்ட நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் கடுமையான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கலாம் என கருதிய பொதுமக்கள் இதனை உடனடியாக தீர்க்கக்கோரி மறியலில் ஈடுபட முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் நேற்று காலை 7 மணியளவில் ஆரணியிலிருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் வடுகசாத்து களத்துமேடு தெரு சந்திப்பில் காலிக்குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று பிளஸ்–1 தேர்வும் தொடங்கிய நிலையில் தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அரசு பஸ்களிலும், பள்ளிக்கூட பஸ்களிலும் வந்தனர். ஆனால் மறியல் நடந்ததால் அந்த பஸ்கள் அங்கேயே நின்றன. தேர்வு நடப்பதால் பள்ளிக்கூட பஸ்கள் செல்ல வழிவிடும்படி அவர்கள் கேட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் அதற்கு மறுத்து விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சில போலீசாருடன் அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது வடுகசாத்து ஊராட்சி செயலாளர் சிவா அங்கு சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரை மறியலில் ஈடுபட்டிருந்த சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அனைவரையும் அமைதிப்படுத்தினர்.

    அதற்குள் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கூறுகையில், ‘‘நான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன்.
    அப்போது அவர்கள் ஆரணி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக டெண்டர் விடப்பட உள்ளது. அதில் முதலாவதாக உங்கள் பகுதிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க டெண்டர் விட்டு அதனை இறுதி செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். எனவே மறியலை கைவிடுங்கள்’’ என்றார். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 

    திருவண்ணாமலை செய்தியாளர்.வி.முர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad