சீருடையிலா காவலர் நடத்துனரிடம் பணம் பறிப்பு ...... நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ?
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் புளியங்குடி அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது அந்த பஸ்சின் நடத்துனர் ரூபன் குமார் பஸ் நிலைய வளாகத்தில் சிகரெட் குடித்துவிட்டு, அதனை அணைக்கும் போது அங்கு சீருடை இல்லாமல் இருந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மற்றும் ஒரு காவலர் நடத்துனர் ரூபன் குமாரிடம் சிகரெட் குடித்து குறித்து கேட்டபோது, அவர் நீங்கள் யார் என்று கேட்டதாகவும், சீருடை அணியாமல் இருந்த இருவரும், காவல்துறையை பார்த்து யார் என்று கேட்கிறாய் என்று கூறி, ரூபன் குமாரை இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரூபன் குமாருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட், செல்போன் ஆகியவற்றையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மற்ற அரசு பஸ் ஊழியர்கள் பஸ்கள் எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோவில்பட்டி நகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் தீபாவளி நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் ஏற வந்த பயணிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து வாகனங்கள் நின்றன. இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி முரளிரம்பா, கோட்டாட்சியர் அனிதா, டிஎஸ்பி ஜெபராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமின்றி வெளியூர் செல்லும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை