Header Ads

 • சற்று முன்

  செளதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயம் - சௌதி மாநாட்டை புறக்கணிக்க ஆலோசனை நடத்தும் அமெரிக்கா, பிரிட்டன்


  செளதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானதையடுத்து, செளதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய மாநாடு ஒன்றை புறக்கணிப்பது குறித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா யோசித்து வருவதாக  இணைய தளங்களில் கசிந்துள்ளது 

  செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால் கசோஜி, அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை. துருக்கி அதிகாரிகள் அவர் செளதியில் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் "பொய்" என செளதி மறுத்துள்ளது.

  பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  கசோஜி மாயமானது குறித்து கவலை தெரிவித்து, நிதி ஆதரவாளர்கள் மற்றும் பல ஊடக குழுக்கள் செளதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கருவூலச் செயலர் ஸ்டீவன் மனூஷ், மற்றும் பிரிட்டனின் சர்வதேச வர்த்தகச் செயலர் லியம் ஃபாக்ஸ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் போகலாம் என ராஜரீக செய்தி வட்டாரங்கள் பிபிசியின் செய்தியாளர் ஜேம்ஸ் லாண்டலேயிடன் தெரிவித்துள்ளனர். ஜமால், செளதி அரசால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டால் கூட்டு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிடவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தூதர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

  முதலீடு குறித்த அந்த மாநாடு செளதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின், சீர்த்திருத்த செயற்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படுகிறது. முனிஷ் மற்றும் ஃபாக்ஸ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றால், அது செளதி அரேபியா அதன் இரு முக்கிய கூட்டாளி நாடுகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக அமையும். பிரிட்டனின் சர்வதே வர்த்தக துறையைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் பேசுகையில், "ஃபாக்ஸின் நாட்குறிப்பில் மாநாடு குறித்த எந்த குறிப்பும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

  ஐ.நா. கேள்வி
  முன்னதாக "என்ன நடந்தது என்பதும், இதற்கு யார் பொறுப்பு என்பதும் எங்களுக்கு தெரிய வேண்டும்." என பிபிசி செய்தியாளர் கமல் அகமதிடம் ஐ.நா பொதுச் செயலர் அண்டொன்யு குட்டாரிஷ் தெரிவித்தார். "சர்வதேச நாடுகள் இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். "என்ன நடந்தது என்பது குறித்து தெளிவான பதில் கூறிய பிறகு பிற நாடுகள் அதில் கலந்து கொள்வது குறித்து முறையான வழியில் முடிவுகளை எடுக்கும் என குட்டாரிஷ் தெரிவித்துள்ளார்.

  துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர், மெவலூட் சவுஷவ்லு, செளதியின் உள்துறை அமைச்சரும், இளவரசருமான அப்துலாசிஸ்-பின்-செளத்-பின் நயிஃப் -பின்-அப்துலாசிஸ், தங்களது அரசாங்கமும் முழு உண்மையைக் கண்டறிவதில் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்திருந்த போதிலும், செளதி அரேபியா இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்துருக்கி அதிகாரிகள் தூதரகத்துக்குள் நுழைய செளதி அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  காணொளி சான்றுகள்
  இஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துணை தூதரகத்திற்குள் தாக்குதலும், போராட்டமும் நடைபெற்றுள்ளதை சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி அதிகாரிகள் தவிர வேறு யாராவது இந்த சான்றுகளான ஒலிப்பதிவை கேட்டுள்ளனரா, காணொளியை பார்த்துள்ளனரா என்று தெளிவாக தெரியவில்லை.

  கசோஜியை ஆட்கள் அடிப்பதை கேட்க முடிகிறது என்று ஒருவர் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்டுள்ள ஆதாரம் ஒன்று குறிப்பிடுகிறது. கசோஜி இந்தப் பத்திரிகையில் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது. கசோஜி கொல்லப்பட்ட தருணத்தை காட்சிப்படுத்திய காணொளி இருப்பதாக கூறப்படுகிறது என துருக்கி அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் பிரபல பத்தி எழுத்தாளர் கமால் ஒஸ்டுரக் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார், ஜமால் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார். விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகத்தான் அவர் இந்த தூதரகத்துக்கு சென்றுள்ளார்.


  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad