வைகோ கைதை கண்டித்து கோவில்பட்டியில் மதிமுகவினர் சாலைமறியல்
சென்னையில் ஆளுநர் பற்றிய செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த நக்கீரன் வார இதழ் செய்தி ஆசிரியர் கோபாலை பார்க்க போலீசார் அனுமதி மறுத்ததை அடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் மதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சாலைமறியல் குறித்து கேள்விப்பட்டதும் போலீசார் விரைந்து வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, அப்புறப்படுத்தினர். இந்த சாலைமறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி செயலாளர் லவராஜா, மாவட்ட பிரதிநிதி முத்துபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை